எல்லாமே விதி அல்ல மதியும் ஆங்கு உண்டு

விதியென்று கிடந்துவிட்டால் வழிமூடிப் போகுமன்றோ ?
சதியென்று எண்ணிவிட்டால் சங்கடத்தால் தள்ளுமன்றோ ?

விழிதிறந்து நின்றுவிடின் வழியொன்று தோன்றுமன்றோ ?
பழிகொண்ட வாழ்வதுவும் பதம்பெற்று நடக்குமன்றோ ?

கரையேற முடியாமல் கலங்கியலைக் கிடப்பதில்லை
முயலாமல் என்றென்றும் மூழ்கியது ஓய்வதில்லை !

தேய்ந்துவரும் மதிகூட தளர்ந்தென்றும் போவதில்லை
வளர்பிறையை அதுதேடி வானமெங்கும் நடைபோடும் !

தாழ்வதுவும் எழுவதுவும் அலையினுக்கு வாடிக்கை
அதைக்கண்டு மகிழுவதோ மனிதனுக்கு வேடிக்கை !

மறைந்துவிடும் பகலவனும் மறுபடியும் தோன்றிடுவான்
மறைவதனை விதியென்று மனந்தளர்ந்து போவதில்லை !

மதிகொண்டு முயன்றுவிடின் ஆமைகூட வென்றுவிடும்
விதியென்று மானிடனே மதிமயங்கி வீழ்வதுவோ ?

மேலென்றும் கீழென்றும் நிலைமாறிச் சென்றால்தான்
சக்கரங்கள் வழிநடந்து இலக்குதனை அடையுமன்றோ ?

மேல்படிக்குச் செல்வதற்கு கீழ்படியை மிதிக்கவேண்டும்
விதி படியை மிதித்துவிடு மதி படியை எட்டிடலாம் !

படிப்படியாய் ஏறுவதே பண்பட்ட உயர்வாகும்
அடிப்படையை மறந்துவிடின் அழிந்துவிடும் வாழ்வதுவும் !

எல்லாமே விதயென்று எண்ணுவதை விட்டுவிடு
மதியுண்டு விதிவெல்ல எனும்எண்ணம் கொண்டுவிடு !

மதியால்தான் அறிவியலும் மண்மீது செழிக்குதன்றோ ?
உதிர்ந்தாலும் மலர்கூட மாலையிலே சேருமன்றோ ?

நடப்பதெல்லாம் விதிவழிதான் எனும்பொய்யை நம்பாதே
மடமையினை நீஒழித்து மதிகொண்டு நீவெல்லு !

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (27-Feb-22, 12:00 pm)
பார்வை : 94

மேலே