உள்ளம் பெருமிதத்தால் நிறைந்து போனது
திருச்சியில் இருந்து பேரூந்தில் பயணம் செய்த களைப்பு, அதோடு இரவு வந்து படுக்கும் போது மணி 12ஐத் தாண்டிவிட்டதால், எப்பொழுதும் அதிகாலையிலேயே எழுந்துவிடும் கவிதாவால் , அன்று எழுந்திருக்கவே முடியவில்லை. நன்றாகத் தூங்கிவிட்டவள் கண்விழித்துப் பார்த்தபோது மணி எட்டைத் தாண்டி இருந்தது. இருந்தாலும் உடம்பு வலி அதிகமாக இருந்ததால், உடனே அவளால் எழுந்திருக்க மனம் வரவில்லை. கணவரும் எப்போதும் அதிகாலையிலேயே தோப்பைப் பார்க்கச் சென்றுவிட்டதால், அவள் யாருக்காகவும் எழுந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. உருண்டு உருண்டு படுத்துத் தன்னைச் சுறுசுறுப்பாக்க முயன்று கொண்டு இருந்தாள். அப்பொழுதுதான் அவளது தலைமாட்டில் வைத்திருந்த அலைபேசி ஒலித்தது. காலையிலேயே யாரோ நம்மைத் தொந்தரவு செய்கிறார்களே என்று திட்டிக்கொண்டே, ஒருவேளை திருச்சியில் இருந்து சின்ன மகள் ‘எப்படி வந்து சேர்ந்தேன் என்று தெரிந்து கொள்ளத்தான் கூப்பிடுவாளோ ?’ என்ற எண்ணத்தோடு, அலபேசியை எடுத்துக் காதில் வைத்து,
‘யாரு ?’ என்றாள்.
‘நான் தான் லட்சுமி ‘ எனும் குரல் கேட்டதும், என்னடா இது, காலங்கார்த்தாலே இவள் பேசுகிறாள். இரவு தானே வழக்கமா கூப்பிடுவாள் என்று எண்ணிக்கொண்டே,
‘என்ன லட்சுமி . என்ன செய்தி ?’ என்றாள்
‘ எப்போ வந்து சேர்ந்தே ? ‘
‘ இரவு வந்து சேர்ந்தபோது மணி 12 ஐத் தாண்டி விட்டது. ஒரே உடம்பு வலி. அதான் அசதிலே தூங்கிவிட்டேன். இப்பந்தான் எழுந்திருக்கிறேன். அதிகாலையிலே கூப்பிட்டு இருக்கே ஏதாவது அவசரமா ? ‘
‘ ஆமாக்கா … உங்கிட்ட சொல்லறதுக்கும் சங்கடமாத்தான் இருக்கு. ஆனா வேறு வழியில்லை ‘ என்று பிடீகை போட்டாள் லட்சுமி.
‘சொல்லு லட்சுமி . என்ன செய்தி ?’ என்றாள் கவிதா.
‘அக்கா ! அப்பாவுக்கு உடம்புக்கு ரொம்ப முடியலையாம். ஒரே வயித்துப் போக்கா இருக்குதாம். எது சாப்பிட்டாலும் வயித்தால போயிடுதாம். படுத்த படுக்கையா கிடக்குறாராம். கவனிக்க யாரும் இல்லை. அண்ணன் கொரானா தடுப்பூசி போட்டுட்டு படுத்த படுக்கையா கிடக்கிறானாம். கொஞசம் போயி பார்த்துட்டு , மருந்து மாத்திரை வாங்கிக் கொடுத்திட்டு வாரியாக்கா ? . நினைச்சுப் பார்க்கவே பாவமா இருக்கு… எப்படி இருந்த மனுசன் . இன்றைக்கு அனாதை மாதிரி கிடக்கிறாரு…’ என்றவளின் குரல் தளுதளுத்ததை கவிதாவால் புரிந்து கொள்ள முடிந்தது. அவளுக்கும் மனசுக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது.
‘ சரி லட்சுமி !.போய் பார்த்துட்டு உங்கிட்ட பேசுறேன் ‘
‘ அக்கா ! நீ இப்பந்தான் பணத்தைச் செலவு பண்ணிட்டு வந்திருக்க , உன்கிட்ட பணம் இருக்காதுன்னு தெரியும். நானும் கொஞ்சம் பணம் அனுப்புகிறேன். உன் வங்கி கணக்கு எண்னை அனுப்பி வை. பணம் போடுகிறேன்’
‘சரி . நான் போய் பார்த்துட்டு உங்கிட்ட பேசுறேன் . வைச்சுடட்டுமா ? ‘
‘சரிக்கா ‘ என்று வட்சுமி கூறியதும் , அலைபேசியை அணைத்து வைத்துவிட்டு , சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தாள். அப்பாவின் பாசம் அவளது உடல் வலியை பறந்தோடச் செய்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
அவசர அவசரமாக வீட்டு வேலைகளை முடித்து, சோற்றைப் பொங்ககி ஒரு குழம்பை வைத்தாள். பரபரவென்று தண்ணீரை ஊற்றி குளித்து விட்டு, இரண்டு வாய் சோற்றை அள்ளி வயிற்றில் போட்டுவிட்டு, வீட்டைப் பூட்டி, சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து , செய்தியைச் சொல்லி கணவரிடம் சொல்லச் சொல்லிவிட்டு, ஓட்டமும் நடையுமாக ஓடி, ஒரு ஆட்டோவைப் பிடித்து போய் சேர்ந்தபோது நேரம் நடுப்பகலைத் தாண்டி விட்டது.
நாராய் சுருண்டு கிடந்த அப்பாவைப் பார்த்தபோது, அவளது கண்கள் குளமாகி விட்டன.
‘அப்பா ! அப்பா !’ என்று அழைத்தாள்.
மெல்லக் கண்ணைத் திறந்து பார்த்தவர், சட்டென யாரென்று தெரியாமல் ‘யாரு ‘ என்றார். கிணற்றுக்குள் இருந்து பேசுவது போல் கேட்டது.
‘நான்தானப்பா ..கவிதா ‘ என்றாள்.
‘நீ யால ‘ என்றவரின் கண்கள் பனித்தன.
‘பாருல ..நான் அனாதை மாதிரி கிடக்கிறேன்.. உங்க அம்மா உயிரோட இருந்து இருந்தா என் நிலைமை இப்படி ஆகி இருக்கமா ? ‘
‘அதுக்கு இப்ப என்னப்பா செய்ய முடியும். எது நடக்கணுமுன்னு இருக்குதோ அதுதானப்பா நடக்கும்.. உடம்புக்கு என்னப்பா பண்ணுது ? ‘
‘எது சாப்பிட்டாலும் , வயித்தால போகுது.. எதுவும் வயித்துல தங்க மாட்டேங்குது… சாப்பிடவும் முடியல.. உடம்பு வேறு அசதியா இருக்குது.. எந்திரிச்சு உட்காரவே முடியலை.. நானும் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போகச் சொல்லியும் , ஒருத்தரும் காது கொடுத்துக் கேட்கல … என்னல செய்றது ?’
‘ உங்களால எழுந்து டாக்டர் கிட்ட வரமுடியாது. நான் போயி டாக்டரை வீட்டுக்கு கூட்டிட்டு வந்திடுறேன் ‘ என்ற கவிதா, அவரை அப்படியே படுத்திருக்கச் சொல்லிவிட்டு, டாக்டரைப் பார்ப்பதற்காகச் சென்றாள்.
டாக்டரிடம் நிலைமை யைஎடுத்துக் கூறியதும், ‘ வேண்டாம்மா ..நானே வீட்டிற்கு வந்து பார்க்கிறேன். ஒரு பத்து நிமிடம் இரும்மா ? ‘ என்றார்.
காத்திருந்த நோயாளியை கவனித்து அனுப்பி விட்டு, தனக்குத் தேவையான வற்றை எடுத்துக் கொண்டு
‘வாம்மா .போகலம் ‘ என்று கிளம்பியவர் பின்னால் ஒடினாள் கவிதை. ஏன்னா டாக்டரின் நடை அவ்வளவு வேகமா இருந்தது.
வந்தவர் நன்றாக பரிசோதித்துப் பார்த்து விட்டு, மருந்து மாத்திரைகளை எழுதிக் கொடுத்து, இரண்டு ஊசிகளையும் போட்டு விட்டு ‘ ‘இலேசான உணவாக கொடுங்க.. இட்லி, இடியாப்பம் கொடுக்கலாம்.. ரொட்டியை வாங்கி பால் கலக்காத டீயில் தொட்டுக் கொடுங்க ‘ என்று கூறிவிட்டு கிளம்பினார்.
‘ டாக்டர்… சரியாப் போயிடுமிலா ? ‘
‘பயம் ஒண்ணுமில்லை . நான் வரட்டுமா ?’ என்று கிளம்பி விட்டார்.
டாக்டர் போனவுடன், கடைக்குச் சென்று ரொட்டியும், பாலில்லாத தேனீரும் வாங்கி வந்து, ரொட்டியை நனைத்து நனைத்து ஊட்டி விட்டாள்… பின்பு அவரை படுக்க வைத்துவிட்டு
‘வெந்நீர் வைக்கிறேன். நல்லா குளிங்க தெம்பு வந்திடும் ‘ என்று கூறிவிட்டு, அடுப்பில் தண்ணீரை ஊற்றி வைத்து விட்டு,
கழற்றிப் போட்டிருந்த துணிகளை எல்லாம் நனைத்துத் துவைத்துக் காயப் போட்டாள் கவிதா.
‘அப்பா இப்போ எப்படி இருக்குது ? என்றாள்
‘ஊசி போட்ட பிறகு பரவாயில்லை . கொஞ்சம் தெம்பு வந்தது போலத் தெரியுது ‘ என்றவர் மெதுவாக படுக்கையில் எழுந்து உட்கார்ந்தார்.
அதைப் பார்த்ததும் ,கவிதாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.
‘சரிப்பா ..வாங்க குளிக்கலாம் ‘ என்று கூறியவள், அவரை மெதுவாக அழைத்துச் சென்று, குளியல் அறையில் ஒரு முக்காலியைத் தூக்கிப் போட்டு, அதில் உட்கார வைத்து, வெந்நீரையும் எடுத்து வந்து அருகில் வைத்தாள்.
குளித்துவிட்டு, துவைத்து வைத்த வேட்டி சட்டையை அணிந்து கொண்டு, மெதுவாக நடந்து வெளியே வந்தவர் முகத்தில் ஒரு தெளிவு
இருந்தது. மெதுவாக நடந்து வந்த அவர் நடையிலும் ஒரு உற்சாகம் தெரிந்தது
என்றுதான் சொல்ல வேண்டும்.
அப்பாவிற்கு உடம்பு ரொம்ப முடியாமல் இருக்கும், எப்படி சமாளிக்குப் போகிறோமோ என்று பயந்து கொண்டே வந்தவளுக்கு, ஒரு பெரிய பாரத்தை இறக்கி வைத்தது போல் உணர்ந்தாள். மனசும் இலேசாகிப் போனது.
‘அப்பா ! வீட்டில போட்டது போட்டபடி அங்கங்கே கிடக்குது. நான் ஊருக்குப் போயிட்டு வந்திடுறேன். மருத்தை எடுத்து வைத்திருக்கிறேன் .வேளா வேளைக்கு மறக்காமல் சாப்பிடணும். ‘ என்று கூறிவிட்டு கிளம்பினாள் கவிதா.
‘சரிம்மா ! நான் பார்த்துகிறேன் . நீ போயிட்டு வாம்மா ‘ என்று வழியனுப்பி வைத்தார்.
என்னாதான் பொம்மளைப் பிள்ளையை வேறோர் வீட்டில் கட்டிக் கொடுத்தாலும், தந்தை பேரில் ஒரு தனியான பாசத்தைச் சுமந்து கொண்டுதான் வாழ்கிறார்கள் என்று நினைத்தபோது அவரது உள்ளம் பெருமிதத்தால் நிறைந்து போனது.