ஒரு புலம்பல்
தப்புத்தப்பா கணக்குப் போட்டு
எக்குத்தப்பா மாட்டிக் கிட்டு
கண்ணு ரெண்டும் பிதுங்கிப் போச்சே
வாழ்க்கை ரொம்ப கொடுமையாச்சே
ஆச ரொம்ப அதிகமான
ஆபத்துன்னு சொன்ன சொல்ல
மதிச்சிடாம போனதால
மதிமயங்கி மானம் போச்சே
அப்பன் சொல்ல கேட்டிடாம
சுப்பன் சொல்ல கேட்டதால
சொப்பனமா இருந்த வாழ்க்க
சொக்கப்பனமா எறிஞ்சிப் போச்சே
என்ன மாயம் நடந்து போச்சே
ஒன்னும் எனக்கு புரியலையே
சொன்ன சொல்லும் சொந்தம் யாவும்
சின்னா பின்னம் ஆயிப்போச்சே
அறிவில்லாம நடந்ததால
காசுபணம் சேரலையே
செறிவில்லாம போனதால
பெரும்புகழும் சரியலாச்சே
படிச்சபடிப்பும் உலக நடப்பும்
இடிச்ச சொல்லும் உதவலையே
என்ன சொல்ல எந்தன் புத்தி
இப்படி ஆகி இடிஞ்சி போச்சே
மனசுக்குள்ள கள்ளமில்ல
சத்தியமா ஒன்னுமில்ல
மடத்தனமா நடந்ததால
மட தெறந்த வெள்ளமாச்சே
ஓடியோடி ஒழைச்ச காலம்
ஓடியெங்கோ மறஞ்சிபோச்சே
ஓடிஒழிஞ்சி ஒதுக்குப்புறமா
நாடி ஒடுங்கி நாறிப்போச்சே
விதிய நொந்து என்ன பயனு
மதிய நம்பி வாழலையே
சதியா வந்து சரசமாடி
கதியமாற்றி கலங்கிப் போச்சே
வீட்டுகணக்கு போட்டிடாம
நாட்டுக்கணக்கு போட்டதால
வீட்டு கணக்கும் நாட்டு கணக்கும்
கெட்டுஇங்கு கொட்டிப் போச்சே
கண்ணு ரெண்டும் இருந்தபோதும்
பள்ளத்துல விழுந்திட்டேனே
மண்ணுமேல இருந்த மோகம்
மண்ணாபோயி மறஞ்சிபோச்சே