தத்தம் வளத்தனைய வாழ்வார் வழக்கு – நான்மணிக்கடிகை 71

இன்னிசை வெண்பா

ஊர்ந்தான் வகைய கலினமா; - நேர்ந்தொருவன்
ஆற்றல் வகைய அறஞ்செய்கை; தொட்ட
குளத்தனைய தூம்பின் அகலங்கள்; தத்தம்
வளத்தனைய வாழ்வார் வழக்கு 71

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

கடிவாளம் பூண்ட குதிரைகள் அவற்றை ஏறிச் செலுத்துவானது திறத்துக்கு ஒத்தன;

அறச் செயல்கள் இசைந்த ஒருவனது ஆற்றலைப் பொறுத்தன;

நீர்க் காலின் பரப்புக்கள் தோண்டப்பட்ட குளங்களின் அளவின;

இல் வாழ்வாருடைய வாழ்க்கைச் செய்கைகள் அவரவரது வருவாய்ச் செழுமையை ஒத்தன.

கருத்து:

குதிரைகள், சவாரிசெய்வானது திறத்துக்கு ஒத்தன; ஒருவனுடைய அறச்செயல்கள் அவன்றன் ஆற்றலைப் பொறுத்தன;

நீர்க்காலின் அகலங்கள் குளத்தின் அளவின; இல்வாழ்வார் வாழ்க்கைகள் அவரவர் வருவாய்ச் செழிப்பை ஒத்தன.

விளக்கவுரை:

குளங்களின் அளவுக்கேற்கவே நீர்செல்லும் நீர்க்கால்கள் அவற்றிற்கு அமைக்கப்பட்டிருக்கும் என்க.
தூம்பு - நீர் வெளியே இழியும் நீர்க்கால்; மதகு, கலங்கல் முதலியனவுமாம்.

கலினம் - கடிவாளம். தொடுதல் - தோண்டுதல். தூம்பு - உட்டுளை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-22, 11:26 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

சிறந்த கட்டுரைகள்

மேலே