சிறுமுயற்சி செய்தாங்கு உறுபயன் கொள்ளத் தாழ்வரோ தாழார் - நீதிநெறி விளக்கம் 70

நேரிசை வெண்பா

சிறுமுயற்சி செய்தாங்(கு) உறுபயன் கொள்ளப்
பெறுமெனில் தாழ்வரோ தாழார் - அறனல்ல
எண்மைய வாயினுங் கைவிட் டரிதெனினும்
ஒண்மையில் தீர்ந்தொழுக லார் 70

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

செய்வதற்கு எளியனவாய் இருப்பினும் அறநெறிக்கு ஒவ்வாத தீச்செயல்களைச் செய்யாமல், செய்தற்கு அரியதாயிருந்த போதிலும் அறிநெறியினின்றும் விலகாது செயல்கள் செய்து அதன் பயன் அடையும் அறிஞர், சிறிய முயற்சி செய்து அம்முயற்சியால் மிகுந்த பயனை அடையக் கூடுமானால் அம்முயற்சியைச் செய்யப் பின் வாங்குவரோ? பின்வாங்க மாட்டார்.

விளக்கம்:

சிறுமுயற்சி – சொல்வன்மையால் உண்டாகும் பயன் போன்றவை, அம்முயற்சி எளிதாதலால் சிறு முயற்சி என்றும், மனம் நல்வழிச் சென்று செய்யும் அறச்செய்கை யார்க்கும் அரிதாகையால் அதனை அரிதென்றுங் கூறினார்.

ஒண்மை – நன்மை; எண்மையவாயினும் என்பதற்கு: எளிதாகச் செய்து பெரும்பயன் பெறத்தக்கனவாய் வாய்க்குமாயினும் என்றுரைத்தலுமுண்டு.

கருத்து:

செய்தற்கரிய அருஞ்செயல் செய்து பெரும்பயன் பெறும் அறிஞர், சிறுமுயற்சியாற் பெரும் பயனடைய வழியிருப்பின் அம்முயற்சியை விரைந்து செய்து நலமுறப் பின்வாங்க மாட்டார்..

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-22, 12:18 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே