நெஞ்சுநோம் என்று தலைதுமிப்பான் தண்ணளி - நீதிநெறி விளக்கம் 71

நேரிசை வெண்பா

செயக்கடவ அல்லனவுஞ் செய்துமன் னென்பார்
நயத்தகு நாகரிகம் என்னாம் - செயிர்த்துரைப்பின்
நெஞ்சுநோம் என்று தலைதுமிப்பான் தண்ணளிபோல்
எஞ்சா(து) எடுத்துரைக்கற் பாற்று. 71

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

செய்தற்கரிய செயல்களையும் மிகுதியும் செய்து முடிப்போம் என்று செயலிற் காட்டாமல் சொல்லளவிற் சொல்லி நிற்பவரின் முகமனான கண்ணோட்டம் என்ன பயனைத் தரும்?

இச்செய்கை எப்படிப்பட்டதன்று சொன்னால், ஒருவரைக் கோபித்துச் சொன்னால் அவர்க்கு மன வருத்தம் உண்டாகுமென்று அவர் தலையை வெட்டும் கருணைத் திறனை ஒக்குமென்று அது கூசாமற் கூறுவது போலாகும்.

விளக்கம்:

நாகரிகம் என்றது இங்கு கண்ணோட்டம்,

தன்னால் செய்ய முடியாத பொழுது தன்னை வந்தடுத்தோன் பிறனிடம் சென்றேனும் பயன் பெறட்டும் என்று விடாமல், தானே அருஞ்செயல்களைச் செய்து விடுவதாய்ச் சொல்லி, அவன் பிறனொருவனிடம் அடையும் பயனையும் அடையவிடாது கெடுத்தலால், 'நெஞ்சு நோமென்று தலைதுமிப்பான் தண்ணளி போல்' என்றார்.

கருத்து:

தன்னை வந்தடுத்துத் தன் உதவி விரும்புவானிடம், தான் செய்தற்கரிய காரியங்களையும் செய்து முடிக்க முடியுமென்று சொல்லளவிற் சொல்லிச் செயலில் அவ்வாறு செய்யாதிருப்பது நாகரிகமாகாது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-22, 12:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 35

மேலே