நான் என்பது என் உடலா மனமா இல்லை வேறா
நான் : ஒரு ஊரில் பல மக்கள் பிறந்து கொண்டும் வாழ்ந்து கொண்டும் இறந்து கொண்டும் இருக்கின்றனர்.
அவன்: அதெப்படி, இறந்து கொண்டு எப்படி வாழ முடியும்?
நான்: எப்படின்னா, எவ்வளவு பேரு வாழ்ந்துகொண்டு இறந்துகொண்டிருக்காங்க, சரிதானே!
அவன்: ஆமாம்!
நான் :அதுமாதிரி தான் இறந்துகொண்டும் இருக்கின்றனர் பலர். உனக்கு தெரியுமா, ஆத்மா எனும் உயிர் உடலை விட்டு பிரிந்தாலும் எங்கேயோ இருந்து கொண்டுதான் இருக்கிறது.
அவன்: எனக்கு நம்பிக்கை இல்லை. செத்தபிறகு நாம் கரியாகி விடுகிறோம். அப்புறம் என்ன ஆத்ம கீத்மா பத்மா இதெல்லாம்?
நான்: பத்மா கீத்மா பத்தி எனக்கு தெரியாது. ஆனால் ஆத்மா என்பது நிச்சயம் உண்டு. அதை எவராலும் பார்க்கமுடியாது, பிடிக்கமுடியாது,கடிக்கமுடியாது, அழிக்க முடியாது. காற்று இருக்கு இல்லையா?
அவன்: ஆமாம் இருக்கு இல்ல.
நான்: பார்த்தாயா நீயே இருக்கு என்கிறாய் இல்ல என்கிறாய். இதுபோலத்தான் ஆத்மாவும். கண்ணளவில் இல்ல. ஆத்ம ஞானம் கொண்டவர்க்கு ஆத்மா என்ற ஒன்று நிச்சயமாக இருக்கிறது. மின்சாரம் கண்ணுக்கு தெரிவதில்லை ஆனால் அது இல்லாமல் எந்த மின் எந்திரமும் கருவியும் இயங்காது. ஆமான்னா இல்லையா?
அவன்: ஆமான்தான் இல்ல. காத்து நம் மேல பட்டு உறைக்குது, மின்சாரம் உடலில் பட்டால் ஷாக் அடிக்குது. ஆனா இந்த ஆத்மா இந்தமாதிரி நமக்கு ஒரு உணர்வை கொடுப்பதில்லையே?
நான்: நீ சின்ன வயதில் இருக்கும் போது எப்படி இருந்தாய், இப்போது எப்படி இருக்கிறாய்?
அவன்: சின்ன வயதில் கவலை இன்றி மற்ற சிறுவர்களுடன் விளையாடி மகிழ்ந்தேன். உருவில் சின்னவனாக இருந்தேன்.இப்போது உயரம் பருமன் எல்லாம் கூடிவிட்டது. ஆனால் உண்மையான நண்பர்கள் மிகவும் குறைந்து விட்டனர். சொல்லப்போனால் இல்லை என்று கூட சொல்வேன்.
நான்: சரியாக சொன்னாய். ஆயினும் உன்னில் "நான்" என்ற ஒரு தனித்தன்மையான உன் மனதின் ஆழத்தின் உள்ளே உள்ள ஒன்று, அந்த தனித்தன்மையான 'நான்' என்ற உணர்வுடன் அப்போதைக்கு இருந்தது, அது இப்போது மாறிவிட்டதா?
அவன்: ம் ம் . கொஞ்சம் யோசிக்க நேரம் கொடு. ம் ம். நீ சொல்வது சரிதாம்பா. ஆறு வயதில் நான் கொண்ட 'நான்' என்ற என்னிலிருந்து தனிப்பட்ட ஒரு உணர்வு அப்போதும் இப்போதும் அப்படியேதான் இருக்கிறது.
நான் : அந்த தனிப்பட்ட உனக்குள் நீ மட்டும் உணர்கின்ற அந்த ரகசிய உணர்வு தான் " ஆத்மா" என்பது.
ஆத்மா நம் உடலில் இருப்பதால் தான் நாம் காற்றை சுவாசித்து, உணவு உண்டு , மனதில் எண்ணம் கொண்டு எல்லா விதமான உணர்ச்சிகளும் கொண்டு வாழ முடிகிறது. இப்படி சொல்லலாம் " ஆத்மா இந்த உடல் இல்லை, உடலுடன் மனமும் இல்லை. ஆனால் இந்த உடலும் மனதும் ஆத்மாவுடையது.
அவன்: என்னப்பா நீயும் குழம்புகிறாய் என்னையும் கொஞ்சம் குழப்புகிறாய்.
நான்: நான் குழம்பவும் இல்லை உன்னை குழப்பவும் இல்லை. எந்த ஒரு பொருளும் ஆக்கப்படுவதுமில்லை அழிக்கப்படுவதுமில்லை. ஏன், நாம் எந்த ஒரு பொருளையும் ஒன்றுமில்லாமல் உருவாக்கமுடியாது. ஏதோ ஒன்றிலிருந்து தான் நாம் ஒரு பொருளை தயாரிக்கிறோம். ஒரு பொருள்தான் இன்னொரு பொருளாக உரு மாறுகிறது. தண்ணீர் கடலிலும் இருக்கிறது,நம் உடலிலும் இருக்கிறது. மழையிலும் தண்ணீர் பெருகுகிறது.ஆனாலும் எதுவும், எதுவும் இல்லாத ஒன்றிலிருந்து வருவதில்லை
அவன்: நீ சொல்வது சரிதான். ஒன்றுமில்லாமல் ஒன்றும் இல்லை. அவ்வளவு பெரிய ஆலமரத்திற்கும் சின்ன ஒரு விதை தேவை, அவ்வளவு உயரமாக வளர்வதற்கு. ஒரு ஆணின் சொட்டு விந்து தான் ஒரு குழந்தையை ஒரு பெண்ணின் வயிற்றில் உருவாக காரணமாக இருக்கிறது. அப்படி என்றால் மனிதனை உருவாகும் மனிதனை யார் உருவாக்கினார்கள்? வெறுமையாய் இருந்த அண்டம் வெடித்தது என்றால், எதோ ஒன்றிலிருந்து தானே உலகமும் மற்ற கோளங்களும் ஏனைய அண்ட சராசரங்களும் உருவாகி இருக்க முடியும்.
நான்: சரியாக சொன்னாய். இதே நோக்கில் பார்க்கையில் இன்று நாம் காணும் அனைத்தும் எப்போதிலிருந்தோ இருந்து தான் வந்திருக்கிறது. ஆனால் அவை எந்த நிலையில் எப்படி இருந்தது என்று தெரியாது. ஏன், வெறுமை , வெற்றிடம் என்னும்போது அங்கே ஒன்றும் இல்லை என்று கூறுகையில், 'அங்கே' என்ற பதம் ஏதோ ஒன்று இருப்பது போல்தான் தெரிகிறது.ஆகவே ஒன்றுமில்லாதது என்று இந்த உலகில் இந்த பிரபஞ்சத்தில் இல்லவே இல்லை. அவன் பர்சில் பணம் இல்லை என்னும்போது , அங்கே பர்ஸ் என்ற ஒன்று இருக்கிறது. அங்கே மனை காலி என்னும்போது அங்கே நிலம் இருக்கிறது. என் மூளை காலி அங்கே ஒன்றும் இல்லை எனும்போது அங்கே மூளை என்ற ஒன்று இருக்கிறது. ஆகாசத்தில் எதுவும் தெரியவில்லை அங்கே ஒன்றும் இல்லை என்று சொன்னாலும், பூமிக்கும் ஆகாசத்திற்கும் வெற்றிடம் என்னும் இடைவெளி கண்ணுக்கு தெரியத்தான் செய்கிறது. பின் எப்படி கூற முடியும் வெற்றிடத்தில் ஒன்றும் இல்லை என்று?
அவன்: அது போலத்தானோ நம் உயிரும் உடலிலிருந்து பிரிந்த பின் ஏதோ ஒரு அருவமாக எங்கேயோ இருக்க வேண்டும். நாம் சுவாசிக்கும் காற்றே நம் கண்ணுக்கு தெரியாமல் இருக்கும்போது பிரிந்த உயிர் எனப்படும் ஆத்மாவை காண எப்படி இயலும்? ஒரு காலும் முடியாது. ஆனால் இப்படி ஒவ்வொரு உடலிலிருந்து பிரியும் ஆத்மா எல்லாம் எங்கு எப்படி இருக்கும் என்றும் கொஞ்சமும் யூகிக்கமுடியவில்லை.
நான்: நானும் அப்படியே தான் நினைக்கிறன். ஒரு விதத்தில் நோக்குகையில் இத்தகைய ஆத்மாக்கள் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் நிச்சயம் கண்ணுக்கு தெரியாத வகையில் தான் அவை இருக்கமுடியும். மனிதனுக்கு காலம் நேரம் தூரம் இவை எல்லாம் உண்டு.ஆனால் மனம் என்ற ஒன்று இல்லை எனும்போது அங்கே நேரம் காலம் தூரம் இப்படிப்பட்ட அளவுகோல்கள் இருக்கமுடியாது தானே?
அவன்: அப்படியும் இருக்கலாம். காலம் என்ற ஒன்று இருப்பின் தூரம், நேரம் என்ற ஒன்று கூடவே இருக்கும். சிலர் கூறுகின்றனர் " ஆழ்ந்த ஆத்மா தியானத்தில் திளைக்கும் ஒருவருக்கு காலம், நேரம், தூரம் என்பது கிடையாது. இவை அனைத்தையும் கடந்த ஒரு நிலையே ஆத்மா இருக்கும் நிலை.
நான்: அப்படி எடுத்துக்கொண்டால் ஆத்மாவிற்கு பிறப்பு மற்றும் இறப்பு எப்படி இருக்க முடியும்? ஆத்மா ஒரு உடலிலிருந்து இன்னொரு உடலுக்கு போகலாம். அது ஆடைகளை நாம் மாற்றுவது போலத்தான். ஆனால் அந்த ஆத்மாவுக்கு பிறப்பு இறப்பு இருக்கமுடியாது. ஏனெனில் ஆத்மா இறந்தால் மீண்டும் எப்படி வேறு உருவில் மீண்டும் பிறக்க முடியும்? இன்னும் கொஞ்சம் ஆழ்ந்து இந்த விஷயத்தை சிந்தனை செய்கையில், கோடிக்கணக்கான ஆத்மாக்கள் ஒன்று சேர்ந்து எங்கும் வியாபித்து இருப்பது தான் பரமாத்மா என்கிற பரம்பொருளாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது. அதாவது தனித்த உருவம் என்று இல்லாமல் ஆனால் காணும் யாவிலும் தானாக இருந்து , அனைத்து பொருட்களிலும் தான் இருந்து, பிறப்பு இறப்பு இன்றி, தொடக்கம் முடிவும் இன்றி, காலம் நேரம் தூரம் போன்ற அளவுகளுக்கப்பால் எப்போதும் விழிப்புணர்வு என்கிற கணிக்கமுடியாத அதிர்வலையில் இருந்துகொண்டிருக்கும் அரிய கருப்பொருள் உண்மை என்று நம்பப்படும் பரப்பிரம்மம் என்பதுதான் இந்த பரமாத்மா என்று நினைக்கத்தோன்றுகிறது. அப்படி எல்லாமே ஒன்று என்பதை, நம் உடல் மன ரீதியாக உணர்வது முடியாத காரியம் என நாம் நினைக்கிறோம். ஆனால் சில மகான்கள் அதையும் உணர்ந்தனர் என்று அவர்களின் ஆத்மா பூர்வமான அனுபவத்தின் வாயிலாக அறிகிறோம். இதற்கு மிகவும் சிறந்த உதாரணம் திருவண்ணாமலையில் பல்லாண்டுகள் தவமிருந்த ரமண மகரிஷி. இவரை போலவே வேறு சில முனிகளும் கூட ரமணமஹரிஷி கூற்றுகளைத்தான் அதிகம் ஆழ்ந்த ஆத்ம சிந்தனையில் உணர்ந்ததாக சிலருக்கு மட்டும் தெரிவித்து சென்றனர்.
அவன்: நானும் நீ சொல்பவற்றை கேள்விப்படுகிறேன். ஆனாலும் ஆன்மிகம் என்பது மதமும் பக்தியையும் கடந்த ஒரு அனுபவம், உலக விஷயங்களுக்கு அப்பாற்பட்ட அனுபவம் என்பதால் எதை நாம் நம்புவது எந்த முறையில் ஆன்மீக பற்றை வைப்பது என்பது சற்றே குழப்பமாகத்தான் உள்ளது.
நான்: புத்தர் போதி மரத்தடியில் ஞானம் பெற்றார் என்று சொல்வதும் இதை போலத்தான். அவரும் உருவ வழிபாடுகளை கடந்து, ஆழ்ந்த ஆத்மீகத்தில் ஈடுபட்டு உயர்ந்த முக்தி நிலை பெற்றார் என்று சொல்ல கேள்வி படுகிறோம். ரமணர் என்ன உணர்ந்தார், புத்தர் என்ன உணர்ந்தார், ஓஷோ ரஜ்னீஷ் என்ன உணர்ந்தார், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ன உணர்ந்தார் என்பதை அவர்களை தவிர வேறு யாரும் உணர முடியாது. அவர்களின் ஆன்மீக அனுபவங்கள் அவர்கள் பரிமாறிக்கொண்ட கருத்துக்கள் இவை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அலசி பார்க்கையில் , ஒருவரின் கர்மா என்பது நிச்சயம் அவரின் இந்த பிறப்பிலும் அதை தொடர்ந்து வரும் பிறப்புகளிலும் ஒருவரின் எண்ணங்களை மற்றும் செயல்களை சார்ந்து அமைகிறது. ஒருவரின் மனம் எப்போது சலனம் இன்றி மாறுமோ அப்போது அவருக்குள் எண்ணங்கள் எதுவும் நிகழாது. அப்போது அவரின் ஆத்மா பிறப்பு இறப்பு என்னும் சூழலிலிருந்து விடுபட்டு பிறப்பில்லாத மேற்குறிப்பிட்ட பரமாத்மாவுடன் இரண்டற கலந்து அதை போலவே பரப்ரம்மமான கருப்பொருளாக திகழும். அப்படிப்பட்ட விவரிக்க முடியாத நிலையில் அன்பு மட்டுமே அந்த சூழ்நிலையில் இருக்கும், அது விழிப்புணர்வின் தன்மையாக இருக்கும். இந்த அன்பு, பரமாத்மாவின் குணம் அல்லது இயல்பு என்று சொல்ல இயலாமல் அன்பே பரமாத்மா, பரமாத்மாவே அன்பு என்கிற ஏகாந்த நிலை என்பது பேருண்மையை அறிந்தவர்கள் என சொல்லப்படுபவர்கள் சொல்லும் கருத்து.
அவன்: நீ சொல்லும் கூற்றில் ஏதோ ஒரு இனம்புரியாத உண்மை புலப்படுவதாகத்தான் எனக்கு தோன்றுகிறது. இந்த உலக வாழ்வில் என்ன செய்திடினும் எவ்வளவு சிந்தனை செய்திடினும் எப்படி பட்ட தியானங்களை எவ்வளவு செய்தாலும் இறுதியில் ஒருவன் ஏமாற்றம் மற்றும் விரக்தியைத்தான் காண்கிறான். பணம் என்னும் கைப்பாவைக்கு அடிமையாகி, உலக ஆசைகள் பலவற்றில் அகப்பட்டு, இன்ப துன்பங்களை அனுபவித்தும் வாழ்க்கையின் இறுதி நாட்களை ஒருவன் திருப்தியுடன் கழிக்க முடிவதில்லை. இவைகளை வைத்து பார்க்கும்போது, மேற்கூறிய ஆன்மீக சிந்தனையில் பற்று வைத்து ஒருவன் வாழ்ந்திடில், இந்த ஏமாற்றம் மற்றும் விரக்தியின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று நான் நிச்சயம் நம்புகிறேன். இதன் மூலம் உண்மையான மகிழ்ச்சியினை, வள்ளலார் காட்டிய தூய அன்பின் வழி கொண்டு, அமைதியின் ஆழம் கண்டு, ஒருவன் ஓரளவுக்காவது உணர்ந்து வாழக்கூடும் என்றும் நான் நினைக்கிறன்.
நான்: அடடா, எப்பேர்ப்பட்ட அருமையான அற்புத செய்திகளை சொன்னாய். இதுவரை உன்னுடன் உரையாடியபின் நீதான் என்னுள் குடிகொண்டுள்ள விழிப்புணர்வான ஆத்மா என்பதை உணர்ந்தேன். இப்போது, நீ என்னில் உன்னை காண்பது போல் நானும் உன்னில் என்னை காண்கிறேன்.