ஆசைக் கடலுளாழ் வார் மூவர் – திரிகடுகம் 81

இன்னிசை வெண்பா

தோள்வழங்கி வாழும், துறைபோற், கணிகையும்
நாள்கழகம் பார்க்கும் நயமிலாச் சூதனும்
வாசிகொண் டொண்பொருள் செய்வானும் இம்மூவர்
ஆசைக் கடலுளாழ் வார் 81

பொருளுரை:

பலருக்கும் பொதுவாய் நின்று தன்னிடத்து நீரைக் கொடுக்கும் துறையினைப் போலப் பலருக்கும் பொதுவாய் நின்று தனது தோளைக் கொடுத்து வாழ்கின்ற வேசையும்,

ஒவ்வொரு நாளும் சூதாடும் இடத்தைத் தேடி ஆடுகின்ற நீதியில்லாத சூதாடியும்,

மிக்க வட்டி வாங்கி ஒள்ளிய பொருளைத் தேடுவானும் ஆகிய இந்த மூவரும் ஆசையாகிய கடலில் அழுந்துவராவர்.

கருத்துரை:

பொருட் பெண்டிர் ஆகிய வேசையும், சூதாடியும், மிகுந்த வட்டி வாங்கிப் பொருள் ஈட்டுவானும் பேராசை பிடித்தவர் எனப்பட்டது.

ஆசைக்கு முடிவில்லை யாதலால் அதனைக் கடலென உருவகித்துள்ளார்; கணிகைத்துறை போலுதலாவது வேண்டினார் யாரும் அடைந்து இன்பங் கொள்ள இசைதல். நாள் - நாளும்: வாசி - வட்டம், வட்டி: திசைச்சொல்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Mar-22, 2:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

சிறந்த கட்டுரைகள்

மேலே