தூற்றின்கண் தூவிய வித்து மூன்று – திரிகடுகம் 80
நேரிசை வெண்பா
முறைசெய்யான் பெற்ற தலைமையும், நெஞ்சில்
நிறையிலான் கொண்ட தவமும், - நிறையொழுக்கம்
தேற்றாதான் பெற்ற வனப்பும் இவை மூன்றும்
தூற்றின்கண் தூவிய வித்து 80
- திரிகடுகம்
பொருளுரை:
முறையறிந்து செய்யமாட்டாதவன் அடைந்த தலைமைத் தன்மையும், மனத்தில் உறுதிப்பாடு இல்லாதவன் மேற்கொண்ட தவமும், குறைவற்ற நிறைவான ஒழுக்கத்தைத் தெளிந்து நடவாதவன் பெற்ற அழகும் ஆகிய இம் மூன்றும் புதரில் விதைத்த விதையை யொக்கும்.
கருத்துரை: முறை புரியமாட்டாதவன் தலைவனா யிருப்பதும், மனவலி யில்லாதவன் தவஞ் செய்வதும், நன்னடக்கை யில்லாதவன் அழகும் வீண் எனப்பட்டது.