தீவினையை ஒழித்து நல்வினையை நாடுவாயாக – அறநெறிச்சாரம் 78
நேரிசை வெண்பா
அஞ்சினா யேனும் அடைவ(து) அடையுங்காண்
துஞ்சினா யென்று வினைவிடா - நெஞ்சே
அழுதா யெனக்கருதிக் கூற்றொழியா தாற்றத்
தொழுதேன் நிறையுடையை யாகு 78
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
மனமே! துன்பத்தைக் கண்டு அச்சமுற்றாயானாலும் வரும் துன்பம் வந்தே சேரும்; தீவினைப் பயனைப் பொறுக்க மாட்டாமல் இறந்தாயென்று கருதிச் செய்த வினைகள் மறுபிறப்பில் உன்னைத் தொடராமலிராது;
இறப்புக்கு அஞ்சி அழுதாய் என்று கருதி வந்த யமன் உயிரைக் கவராது நீங்க மாட்டான்: ஆதலால், உன்னை மிகவணங்குகின்றேன்! மனத்தை நல்வழியில் நிறுத்தலாகிய நற்பழக்க வழக்கங்களைப் பின்பற்று
குறிப்பு: நிறை - மனத்தை நல்வழியில் நிறுத்தலாகிய நற்பழக்க வழக்கங்கள்,

