இறையிற் பெரியாற்கு இவை - ஏலாதி19
நேரிசை வெண்பா
கொல்லான் கொலைபுரியான் பொய்யான் பிறர்மனைமேல்
செல்லான் சிறியா ரினஞ்சேரான் - சொல்லும்
மறையிற் செவியிலன் தீச்சொற்கண் மூங்கை
இறையிற் பெரியாற்(கு) இவை 19
- ஏலாதி
பொருளுரை:
ஓருயிரையுங் கொலைசெய்யான், பிறர் கொலைசெய்தலையும் விரும்பான், பொய் சொல்லான், பிறர்க்குரிய மனைவி மேல் தனக்குரிமை விரும்பான், கீழ்மக்கள் கூட்டத்தைச் சேர்வதற்கு இணங்கான், மறைவாய்ச் சொல்லப்படுகின்ற மறை பொருள்களில் செவிகொடான், தீய சொற்களைப் பேசுதலில் ஊமை ஆகிய இவ்வியல்புகள் பெருந் தன்மையில் பெருங்குணம் உடையவர்க்கு உரியனவாகும்!
கருத்து:
கொல்லாமை முதலியன பெருந்தன்மையுடையான்பாற் காணப்படும்.
புரிதல் விரும்புதல்; இஃதிப் பொருட்டாதலை "நயம் புரிந்துறையுநர்" (145) என்னும் புறப்பாட்டினுங் காண்க.
இறையிற் பெரியான் - தலைமைத் தன்மையிற் பெரியானென்பது;
மறை: மறுக்கப்பட்டது என்பது பொருள். ‘பிறர் பொருள்மேல் செல்லான்',
‘பல்லார் மறையில்' என்றும் பாடம்