காணவில்லை என் செல் போன்

எனக்கு இரண்டு நாட்களுக்கு முன் நிகழ்ந்த உண்மை சம்பவம், இதோ....

உறவினரைக் காண பாண்டிச்சேரி சென்ற இடத்தில் நான் ஒரு மோபெட் வண்டியை வாடகைக்கு எடுத்திருந்தேன்.
அதில் சில செயல் நுணுக்கங்கள் எனக்கு புதிதாக இருந்தது. பெட்ரோல் டாங்கியை திறந்து மூடுதல், டிக்கியை திறந்து மூடுதல் போன்றவை, பெட்ரோல் அளவு எவ்வளவு இருக்கிறது போன்றவை.

ஒரு நாள் காலையில் இந்த வண்டியை செல்ப் மூலம் கிளப்பி விட்டேன். வழியில் ஒரு வேலைக்காக வண்டியை நிறுத்தினேன். அதன் பிறகு செல்ப்பை அழுத்தி வண்டியை கிளப்ப எவ்வளவோ முயன்றும் வண்டி இஞ்சின் தொடங்கவில்லை. அப்போது அங்கு வந்த ஒரு நல்ல மனிதர் என் வண்டியை கிளப்ப முயற்சி செய்தார். ஆனால் நடக்கவில்லை. நான் மிகவும் அதிகமாக செல்ப்பை அழுத்தி விட்டதாகவும் அதனால் பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டு வண்டி கிளம்பவில்லை என்றார். சிறிது இடைவெளி கொடுத்து காலால் உதைத்து கிளப்ப முயன்றார். அதுவும் நடக்கவில்லை. அப்போது அவர் கொஞ்சம் வருத்தம் தொனிந்த குரலில் " வண்டியின் பேட்டரி மொத்தமாக சக்தி இழந்து விட்டது ஆகவே வண்டி கிளம்பாது, ஆகவே பேட்டரியை மாற்ற வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார். நான் என்ன செய்ய, அவருக்கு நன்றி சொல்வதைத் தவிர.

உடனே என் மனைவிக்கு செல்போன் போட்டு பேசினேன். அவளுடன் போனில் பேசிக்கொண்டே இருக்கையில் நான் திடீரென அவளிடம் " ஐயய்யோ, என் செல் போனை காணவில்லை. எங்கே போய் விட்டது என்று பதட்டத்துடன் சொன்னபோது என் மனைவி " நீங்கள் செல் போனில் தானே என்னுடன் இப்போது பேசிக் கொண்டு இருக்கிறீர்கள் " என்றவுடன் தான் செல் போன் என் கையிலேயே உள்ளது என்பதை உணர்ந்தேன். ஒன்று,
வண்டி கிளம்பவில்லை. அடுத்தது, இரண்டு நாட்களுக்கு முன்பு என் அண்ணன் அவன் செல் போனை சென்னையில் தொலைத்து விட்டான். இதன் தாக்கமும் சேர்ந்து என்னை தாக்கியதன் விளைவு தான் நான் என் செல் போனில் உரையாடும் போது, ஒருவித படபடப்பு ஏற்பட்டு " என் போனைக் காணவில்லை " என்று உளறினேன்.

பின்னர் நான் மோப்பெட்டை காலால் கிக் செய்த போது உடனே வண்டி கிளம்பிவிட்டது. அதன் பிறகு செல்ப் சரியாக வேலை செய்தது.
இதைப்பற்றி வண்டியை வாடகைக்கு கொடுத்தவரிடம் கேட்டபோது " அதுவா சார், காலையில் முதல் தடவை காலால் உதைத்து கிளப்பினால் இந்த மாதிரி பிரச்சினை வராது என்றார். ஏற்கனவே புதிய மாடல் வண்டி, நமக்கு சொன்னால் தானே தெரியும்.

தலையில் சீப்பு இருக்கும் போது, சீப்பு எங்கே என்று கேட்டிருக்கிறேன். கண்ணாடி கண்ணில் அணிந்திருக்கும் போது " கண்ணாடி எங்கே " என்றும் கேட்டதுண்டு.கையில் வண்டி சாவியை வைத்து கொண்டு " வண்டி சாவியை தேடியது உண்டு. இந்த வெற்றி வரிசையில் என் செல் போனில் பேசிக் கொண்டு இருக்கையில் " ஐயோ, என் செல் போன் காணவில்லை " என்ற அரிய சாதனையையும் நான் படைத்து விட்டேன். இது போல எவ்வளவு பேர்களுக்கு அநுபவம் ஏற்பட்டிருக்கும்? தெரியாது.

எழுதியவர் : ராம சுப்பிரமணியன் (28-Mar-22, 8:38 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 107

சிறந்த நகைச்சுவைகள்

மேலே