மெல்லிய நல்லாருள் மென்மை சலவருட் சாலச் சலமே – நாலடியார் 188

இன்னிசை வெண்பா

மெல்லிய நல்லாருள் மென்மை; அதுவிறந்(து)
ஒன்னாருட் கூற்றுட்கும் உட்குடைமை; எல்லாம்
சலவருட் சாலச் சலமே; நலவருள்
நன்மை வரம்பாய் விடல் 188

- பெருமை, நாலடியார்

பொருளுரை:

மென்தன்மை யுடைய மகளிரிடம் மென்தன்மையாகவும், பகைவரிடத்தில் அம்மென்தன்மை நீங்கிக் கூற்றுவனும் அஞ்சும் மிடுக்குடைமையாகவும்,

முழுதும் பொய்க்குணமுடைய தீயவரிடத்தில் மிக்க பொய்ம்மையாகவும், மெய்யியல்புடைய மேலோரிடம் மெய்ம்மையாகவும் அவ்வவற்றின் எல்லையாய் நடந்து கொள்ள வேண்டும்.

கருத்து:

மாந்தரின் பல்வேறு நிலைக்கு ஏற்பப் பல்வேறு வகையாக உலகத்தில் நடந்து கொள்ள வேண்டும்.

விளக்கம்:

முன்னிரு வரிகள் மென்மைக்கும் ஆண்மைக்கும், பின்னிரு வரிகள் பொய்ம்மைக்கும் மெய்ம்மைக்கும் வந்தன. ‘நல்லார்' என்றது, சிறப்பாய் மகளிரை உணர்த்திற்று;

உட்கு - மிடுக்கு; எல்லாம் - முழுமை, நன்மை, சலம் என்பதன் மறையாக வந்தமையின் மெய்ம்மை யென்று உரைக்கப்பட்டது;

‘வரம்பாய் விடல்' என்றார், அவ்வக் குணங்களின் மேனிலையுடையீராய் நடந்து கொள்க என்றற்கு,

பொய்யற்குப் பொய்யராய் ஒழுகுதல்; அவர் திருந்தும் பொருட்டும் அவரால்தாம் ஏதம் உறாமைக்கும் என்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Mar-22, 12:10 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே