பெரியார்நூல் காலற்கு வாய்காப்புக் கோடல் வனப்பு - ஏலாதி 23
நேரிசை வெண்பா
(’ல்’ ‘ய்’ இடையின எதுகை)
குணநோக்கான் கூழ்நோக்கான் கோலமு நோக்கான்
மணநோக்கான் மங்கலமும் நோக்கான் - கணநோக்கான்
கால்காப்பு வேண்டான் பெரியார்நூல் காலற்கு
வாய்காப்புக் கோடல் வனப்பு 23
- ஏலாதி
பொருளுரை:
காலுக்கு இடுந் தளை போன்ற தான இல்வாழ்க்கையை விரும்பாத ஒருவன் நல்லியல்பினைப் பொருட்படுத்தாமல், செல்வத்தை மதியாமல், அழகையும் மதியாமல், திருமணத்தை மதியாமல், புண்ணியத்தையும் மதியாமல், சுற்றத்தாரை மதியாமல் காலனுக்கு வாயிற்காப்பாக சான்றோருடைய அறிவு நூல்களைக் கொள்ளுதல் அழகாகும்.
கருத்து:
துறவொழுக்கத்தை விரும்புகின்றவன் இயல்பு முதலியவற்றைப் பொருட்படுத்தாமற் பிறப்பு, இறப்புக் கெடுதற்கான ஆன்றோர் அறிவு நூல்களைக் கற்றொழுகுதலே அழகாகும்.
‘காதலற்கு வாய்காப்புக் கோடல்' என்ற பாடங்கொண்டு, கால்காப்பு வேண்டான் என்பதைத் தந்தை யெனலுமாம். காலன் வருகின்ற வழிக்கு ஒரு காப்பாகவென்க. வாய் - வழி.