காலன் வரவொழிதல் காணின்வீடு எய்திய பாலினூல் எய்தப் படும் – ஏலாதி 22
நேரிசை வெண்பா
வாளஞ்சான் வன்கண்மை யஞ்சான் வனப்பஞ்சான்
ஆளஞ்சான் ஆய்பொருள் தானஞ்சான் - நாளெஞ்சாக்
காலன் வரவொழிதல் காணின்வீ(டு) எய்திய
பாலினூல் எய்தப் படும் 22
- ஏலாதி
பொருளுரை:
பகைவனது வாட்படைக்கு அஞ்சான், கண்ணோட்டம் இன்மையை அஞ்சான், தோற்றப் பொலிவினை அஞ்சான், ஆட்சியை அஞ்சான், தெரிந்து தேடிய செல்வப் பொருளை அஞ்சான்;
ஆயினும், நாள் குறையாத கூற்றுவனது வருகை நீங்குதலை ஒருவன் அடைய விரும்புவனாயின் வீடுபேற்றை அடையும் பொருட்டு ஏற்பட்ட அருட்டன்மை பொருந்திய அறிவு நூல் ஒழுக்கங்களை அடைதல் வேண்டும்.
பொழிப்புரை:
வாள் வென்றியை யஞ்சான், தறுகண்மையை யஞ்சான், தோற்றப் பொலிவினை யஞ்சான், படையாளனென் றஞ்சான், செல்வமுடையனென் றஞ்சான், நாளினை மறந்தொழியாத காலன் தன்மேல்வரும் வரவினை யொழிதலொருவன் காண்பனாயின், வீட்டு நெறியைப் பொருந்திய தன்மையையுடைய நூல்களைச் சாரத்தகும்.
கருத்து:
வீடு பேறடைவதற்கு நல்லொழுக்கங்களே யல்லாமல் அகவழிபாடு முதலியனவும் வேண்டப்படும்.
வாள் முதலியவற்றிற்கு அஞ்சுதல் ஓர் அச்சமன்று; மற்றுக் காலன் வரவுக்கு அஞ்சி முயறலே அஞ்சாமையாமென்பதுந் துணைக் கருத்தென்க. காலன் குறித்த நாள் தவறாது வருதலின், "நாளெஞ்சாக் காலன்' எனப்பட்டான். காலன் அறக்கடவுட்குத் தூதன்!