இயற்கையின் கோபம்

இயற்கையின் கோபம்!

வானமே நீ கோபப்படும்
போதுதான் வானத்தில் வானவேடிக்கை (இடி, மின்னல்) நடைபெறுகிறது!

வானம்
கோபத்தில் கொட்டித்தீர்த்த வார்த்தைகள்தான் மழை!

வானமே!
யார்மீது
கோபம்
சுட்டெரிக்கும் சூரியன் மீதா?

அல்லது
உன்நீல ஆடையை ஓட்டையாக்கிய நட்சத்திரங்கள் மீதா?

நிலா மீது
கோபம்
கொள்ளமாட்டாய்?

அவள் உன்
நீளமனதில்
உலாபோகும்
குளிர் ஓடை!

சூரியனாகத்தான் இருக்கும்
உன் நட்சத்திர சேலையை
மங்கச்செய்து
உன் அங்கத்தை வெளியே காட்டியது
அவன் தான்!

வானமே!
சிலநேரம் கோபத்தில் அழுகிறாய் வெள்ளக்காட்டில் பூமி நீச்சல் பழகுகிறது!

வானமே!
சிலநேரம்
கண் மூடி
தூங்கிவிடுகிறாய் மழையின்றி
உலக உயிர்கள் பசியில்
உயிர்துறக்கிறது!

வானமே!
உன் கோபம்
யார் மீது
வலியவர் மீதா? எளியவர் மீதா?

காற்றை கைகூலியாக்கி காரை வீட்டை
விட்டு விட்டு
ஓலை வீட்டை அல்லவா
ஒழித்துக்கட்டுகிறாய்

வள்ளுவனை படித்ததில்லையா வளியே?

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் என்பது சிந்தைக்கு எட்டவில்லையா?

பூமியே;
உன் எரிச்சல்
கோபம் தான் எரிமலையோ?

எப்போதாவது
உன் அடிவயிற்று கோபத்தை
உடற்று வழி உமிழ்கிறாய்!

ஏன் கோபம்
பூமித் தாயே?
இத்தனை ஓட்டைகள் உன் உடலில் போட்டதால் எரிக்கத்தான் உமிழ்ந்தாயோ
எரி குழம்பை!

வேர்கள் எல்லாம் உயிர் நீர் உறிஞ்ச
பொறுக்காது கொதித்து
எழுந்தாயோ!

கடலே!
நீ சிலநேரம் கோபத்தில் காலனாக மாறிவிடுகிறாய்!

சுனாமி எனும் சுண்டுவிரல் கொண்டு
சுருட்டி உயிர்தாகம் தணிகிறாய்!

பொறுத்துப் பொறுத்துப் பார்ப்பாய்
வெறுத்து ஒருநாள் அறுத்து உயிர்களை மாய்ப்பாய்!

தீயே!
நீ தான்
கோபத்தின்
உச்சம்!

நீயோ வைப்பதில்லை எதையும் மிச்சம்!

நிர்மூலம் ஆக்குவதில்
நீயே உனக்கு
துச்சம்!

காட்டுத்தீயாய்
உன் கோபத்தை காட்டிச்செல்வாய்!

கொள்ளிவாய் பிசாசாய்
பயம் கொள்ளச் செய்வாய்!

குடியிருக்கும் வீட்டிலும் தீக்குச்சியில் அடங்குவாய்!

சிலர்
உன்னை
கும்பிடவும்
செய்வர்!

சிலர்
கோபத்தில் உன்னில் குளிக்கவும்
செய்வர்!

பஞ்சபூத
கோபம்
வேண்டாம்!

பலரும்
பயனுறும் பண்புதான் வேண்டும்!

கவிஞர் புஷ்பா குமார்.

எழுதியவர் : புஷ்பா குமார் (29-Mar-22, 2:17 pm)
சேர்த்தது : மு குமார்
Tanglish : iyarkaiyin kopam
பார்வை : 275

மேலே