விரைந்துநீ மற்றோரிடம் நாடிக்கொள் - அறநெறிச்சாரம் 91

நேரிசை வெண்பா

பழியொடு பாவத்தைப் பாராய்நீ கன்றிக்
கழிபெருங் காமநோய் வாங்கி - வழிபடா(து)
ஓடுமன னேவிடுத் தென்னை விரைந்துநீ
நாடிக்கொள் மற்றோ ரிடம். 91

- அறநெறிச்சாரம்

பொருளுரை:

மிகப் பெரிய ஆசை நோயை உட்கொண்டு, என் வழியே இணங்காமல் பிற பெண்கள் மீது மிக ஆசைப்பட்டுச் செல்லுகின்ற மனமே!

நீ பழி பாவங்களைப் பார்க்க மாட்டாய்! ஆதலால், என்னை விட்டு நீங்கி சேர்தற்குரிய வேறோரிடத்தை நீ விரைந்து தேடிக்கொள்!

பதவுரை:

கழி பெருங் காமநோய் வாங்கி - மிகப் பெரிய ஆசை நோயை உட்கொண்டு,

வழிபடாது - என் வழியே இணங்காமல்,

கன்றி ஓடும் மனனே - பிற பெண்கள் மீது மிக ஆசைப்பட்டுச் செல்லுகின்ற மனமே!

நீ பழியொடு பாவத்தைப் பாராய் - நீ பழி பாவங்களைப் பார்க்க மாட்டாய்

(ஆதலால்), என்னை விடுத்து - என்னை விட்டு நீங்கி,

மற்றோரிடம் - சேர்தற்குரிய வேறோரிடத்தை,

நீ விரைந்து நாடிக்கொள் - நீ விரைந்து தேடிக்கொள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (9-Apr-22, 6:16 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

சிறந்த கட்டுரைகள்

மேலே