தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல - பழமொழி நானூறு 95
நேரிசை வெண்பா
தத்தமக்குக் கொண்ட குறியே தவமல்ல
செத்துக சாந்து படுக்கமனன் - ஒத்துச்
சகத்தனாய் நின்றொழுகும் சால்பு தவமே
நுகத்துப் பகலாணி போன்று. 95
- பழமொழி நானூறு
பொருளுரை:
தத்தமக்குத் தோன்றியவாறே கொண்ட வேடங்கள் தவமாகாது; வாளாற் செத்துக, அன்றிக் குளிர்ந்த சந்தனத்தைப் பூசுக, மனம் பொருந்தி நுகத்தின்கண் நடுவு நிற்கும் பகலாணியை ஒப்ப ஒன்றுபட்டவனாகி நடுவுநிலை யினின்று ஒழுகும் அமைதியே தவமாம்.
கருத்து:
காய்தல் உவத்தலின்றி ஒழுகும் அமைதியே தவமாம்.
விளக்கம்:
'தத்தமக்குக் கொண்ட குறி' என்றது மழித்தல், நீட்டல், மயிற்பீலி கோடல் முதலியனவாம்.
'மனன் ஒத்த’ லாவது செஞ்சாந் தெறியினும் செத்தினும் போழினும் நெஞ்சோர்ந் தாடா நிலைமை.
தவமே என்றதில் உள்ள ஏகாரத்தைப் பிரித்துச் சால்பு என்றதனோடு கூட்டுக.
'நுகத்துப் பகலாணி' நடுநிலைமைக்கு எடுத்துக் காட்டப்படுவது ஒன்று.
'நுகத்திற் பகலனையாய்' என்பது தஞ்சைவாணன் கோவை.நுகமாவது நுகத்தடி எனப்படுவது.
'நுகத்துப் பகலாணி போன்று' என்பது பழமொழி.