சேத்திரத் திருவெண்பா - பாடல் 9 - குழித்தண்டலை எனப்படும் தண்டலை நீணெறி

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

நேரிசை வெண்பா

அழுகு திரிகுரம்பை ஆங்கதுவிட் டாவி
ஒழுகும் பொழுதறிய ஒண்ணா - கழுகு
கழித்துண் டலையாமுன் காவிரியின் தென்பாற்
குழித்தண் டலையானைக் கூறு. 9

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

இவ்வெண்பா, 'காவிரியின் தென் பகுதியிலுள்ள குழித்தண்டலை எனப்படும் தண்டலை நீணெறியில் உள்ள இறைவனின் பெயரினைச் சொல்லி வணங்கு' என்று கூறுகிறது.

பொழிப்புரை:

மூப்பினாலும், பிணியினாலும் அழுகிக் கெட்டுப்போன குடில் போலும் உடம்பு அங்கிருந்த விட்டு நீங்கி, உயிர் ஓட்டைக் குடத்தினின்றும் நீர் நீங்குதல் போல நீங்கும் பொழுது நமக்குத் தெரியாது.

கழுகு போன்ற பறவைகள் அலைந்து திரிந்து அவ்வுடலை உண்டு அதன் காலத்தைக் கழிப்பதற்கு முன் காவிரியின் தென் பகுதியிலுள்ள குழித்தண்டலை எனப்படும் தண்டலை நீணெறியில் உள்ள இறைவனின் பெயரினைச் சொல்லி வணங்கு என்கிறார் இப்பாடலாசிரியர் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

குறிப்புரை:

திரி - கெட்டுப்போன. கெட்டது மூப்பினாலும், பிணியினாலும்.

குரம்பை - குடில், குடில் போலும் உடம்பு. ஆங்கது, ஒரு சொல் நீர்மைத்து.

ஆவி - உயிர். ஒழுகுதல் - ஓட்டைக் குடத்தி னின்றும் நீர் நீங்குதல் போல நீங்குதல். இது நீங்குதலே இயல்பாதலைக் குறித்தவாறு.

அறிதல், இங்கு நினைத்தல் `கழித்து உண்டு அலையா முன்` என்றாரேனும், `அலைந்து உண்டு கழியாமுன்` என்றலே கருத் தென்க.

தண்டலை - `தண்டலை நீணெறி` என்னும் தலம். இது `குழித் தண்டலை` என வழங்கினமை பெறப்படுகின்றது.

1.ஊர்: குளித்தலை, கரூர் மாவட்டம்

புராண பெயர்(கள்): கடம்பை, கடம்பந்துறை, கடம்பவனம், தட்சிணகாசி, குழித்தண்டலை, பிரமபுரம், சதுர்வேதபுரி, கந்தபுரம்

மூலவர்: கடம்பவனேஸ்வரர், கடம்பவனநாதர், சுந்தரேசர், ஸௌந்தரர்
உற்சவர்: சோமாஸ்கந்தர்

தாயார்: முற்றாமுலையம்மை, பாலகுசாம்பிகை
உற்சவர் தாயார்: ஸ்ரீமீனாட்சி

தல விருட்சம்: கடம்பமரம்
தீர்த்தம்: காவிரி, பிரமதீர்த்தம்
பாடியவர்கள்: அப்பர், அருணகிரிநாதர்

கன்வமுனிவருக்கு இறைவன் கடம்ப மரத்தில் காட்சியளித்த தலமென்பது தொன் நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் இரண்டாவது சிவத்தலமாகும்.

2. திருத்தண்டலைநீணெறி (தண்டலச்சேரி)

இறைவன் பெயர்: நீணெறிநாதர், ஸ்திர புத்தீசுவரர்
இறைவி பெயர்: ஞானாம்பிகை

திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் சுமார் 4 கி.மி. தொலைவில் இத்தலம் இருக்கிறது.

இந்த இரண்டு ஊர்களில் எது சரியென்று என்னால் உறுதி செய்ய இயலவில்லை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Apr-22, 9:03 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 48

மேலே