சேத்திரத் திருவெண்பா - பாடல் 10 - தொண்டுபட்டு திருவாரூர்

சேத்திரத் திருவெண்பா, ஐயடிகள் காடவர்கோன் நாயனார் (பல்லவ முதலாம் பரமேஸ்வரன்
கி.பி 670 – 675) பாடியது.

நேரிசை வெண்பா

படிமுழுதும் வெண்குடைக்கீழ்ப் பாரெலாம் ஆண்ட
முடியரசர் செல்வத்து மும்மைக் - கடியிலங்கு
தோடேந்து கொன்றையந்தார்ச் சோதிக்குத் தொண்டுபட்(டு)
ஓடேந்தி யுண்ப(து) உறும். 10

குறிப்புரை :

(இவ்வெண்பாக்கள் யாவும் `யாக்கை (இந்த மானிடப் பிறப்பில் நாம் பெற்ற உடலின்) நிலையாமையை உணர்ந்து, இன்றே, இப்பொழுதே தலங்கள் தோறும் சென்று சிவனை வழிபட்டு உய்தல் வேண்டும்` என்பதையே அறிவுறுத்துகின்றன).

பொழிப்புரை:

உரிமையோடு ஒரு குடைக்கீழ் சிறப்பாக இந்த நிலவுலகம் முழுவதும் பரிசுத்தமான ஆட்சிதரும் மணிமுடி அணிந்த அரசரின் செல்வத்தின் கீழ் வாழ்வதைக் காட்டிலும், வாசனை பொருந்திய இதழ்களை உடைய கொன்றை மலர்களாலான மாலையணிந்த சோதிமயமான எம் இறைவன் சிவபெருமானுக்குத் தொண்டு செய்து பிட்சைப் பாத்திரமாகிய ஓடேந்தி உண்பது மும்மடங்கு சிறப்பாகும் என்கிறார் ஐயடிகள் காடவர்கோன் நாயனார்.

`ஒரு வெண்குடை` என்பது ஆற்றலால் கொள்ளக் கிடந்தது

`செல்வத்தின்` என்றே பாடம் ஓதலும் ஆம். மும்மை - மும் மடங்கு. `மும்மடங்கு உறும்` என முடியும்.

உறும் - நன்றாம். கடி - வாசனை. தோடு - இதழ்.

`கடியிலங்கு ..... உண்பது` என்பதனை முதலிற் கூட்டியுரைக்க. ஓடு ஏந்துதல், ஏந்தி இரத்தலாகிய தன் காரியத்தைத் தோற்றி நின்றது.

இந்நாயனார், மன்னர் எலாம் பணிசெய்ய அரசாண்ட பல்லவ மன்னராய் இருந்தும், `அரசை இன்னல்` எனத் துறந்தார் - என்று சேக்கிழார் கூறியதற்கு இவ்வெண்பாவும், இனி வரும் `தஞ்சாக மூவுலகும்` என்னும் வெண்பாவும் அகச்சான்றாய் நிற்கிறது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (11-Apr-22, 10:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 38

மேலே