அருக்குக யார்மாட்டும் உண்டி சுருக்குக செல்லா இடத்துச் சினம் – நான்மணிக்கடிகை 87
இன்னிசை வெண்பா
பெருக்குக நட்டாரை நன்றின்பா லுய்த்துத்
தருக்குக வொட்டாரைக் காலம் அறிந்தாங்(கு)
அருக்குக யார்மாட்டும் உண்டி; சுருக்குக
செல்லா இடத்துச் சினம் 87
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
ஒருவன் தனக்கு நண்பரானாரை நன்மையிற் செலுத்தி நல்வாழ்வில் உயர்த்துக;
ஒட்டாத பகைவர்களை உரிய காலந் தெரிந்து மறங்கொண்டு வெல்க;
யாவரகத்தும் அடுத்துண்ணுதலை சுருக்கிக் கொள்க;
செல்லுந் தகுதியில்லா விடத்து சினத்தைத் தணித்துக் கொள்க.
கருத்து:
நண்பரை நல்வாழ்விலுயர்த்துக; பகைவரைக் காலமறிந்து வலிசெய்க;
யாவரகத்தும் அடுத்து உண்ணுதலைக் குறைத்துக் கொள்க;
செல்லத்தகாத இடத்திற் சினத்தைத் தணித்துக் கொள்க.
விளக்கவுரை:
நட்டார்க்கு நன்மை செய்யுநேரம் எப்போது வாய்க்குமென்று எவரும் எண்ணிக் கொண்டிருத்தலே நட்பின் சிறப்பாம்;
தருக்குதல் - வீரங்கொள்ளல்; வெற்றிக்கென்று கொள்க;
யார்மாட்டுமென்றார், நெருங்கிய நண்பர், உறவினர் வீட்டிலும் என்றற்கு;
செல்லாவிடம் என்றதை, வலியார் மாட்டெனக் கொள்க.
"செல்லாவிடத்துச் சினந்தீது" (வெகுளாமை, 2) என்று நாயனார் அருளிச் செய்தலின் வலியார் மாட்டெனக் கூறும் உரையே உரையாதலறிக.