பேரின்ப மாக்கட லாடுவார் வீழ்பவோ பாரின்பப் பாழ்ங்கும்பி யில் - நீதிநெறி விளக்கம் 88

நேரிசை வெண்பா

சிற்றின்பம் சின்னீர தாயினும் அஃதுற்றார்
மற்றின்பம் யாவையுங் கைவிடுப - முற்றுந்தாம்
பேரின்ப மாக்கடல் ஆடுவார் வீழ்பவோ
பாரின்பப் பாழ்ங்கும்பி யில் 88

- நீதிநெறி விளக்கம்

பொருளுரை:

சிற்றின்பம் சிறுமையுடையதாயினும் அவ்வின்பத்திற்கு ஆளானோர் மற்ற எல்லா இன்பங்களையும் கைவிடுவார்கள்.

பேரின்பமென்னும் பெரிய கடலிலே எப்போதும் முழுகுபவர்கள் உலகவின்பமாகிய நரகத்தில் வீழ்வரோ? வீழார்.

விளக்கம்:

கும்பி - சேறு, 'யானையுநரகமுஞ் சேறுங்கும்பி' பிங்கலம்;.

சிற்றின்பம் - சிறுமை இன்பம்;

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே,
மற்றின்பம் வேண்டு பவர்"

என்னுந் திருக்குறள் கருத்து இங்கு நினைவு கூரற்பாலது

கருத்து: பேரின்பம் விரும்பினோர் சிற்றின்பத்தை விரும்பார்; சிற்றின்பம் விரும்பினோர் மற்ற இன்பமெல்லாங் கைவிடுவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Apr-22, 6:09 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே