அவ்வினை காத்தல் இலரேல் தூர்த்தருந் தூர்ப்பார் அலர் - நீதிநெறி விளக்கம் 89
நேரிசை வெண்பா
(’ர்’ இடையின ஆசு)
எவ்வினைய ரேனும் இணைவிழைச்சொன்(று) இல்லெனின்
தெவ்வுந் திசைநோக்கிக் கைதொழூஉம் - அவ்வினை
காத்தல் இலரேல் எனைத்துணையர் ஆயினும்
தூ’ர்’த்தருந் தூர்ப்பார் அலர் 89
- நீதிநெறி விளக்கம்
பொருளுரை:
எவ்வகையான தீச் செயல்களைச் செய்பவராக இருந்தாலும் மகளிரைச் சேர்ந்து இன்புறுதல் என்னும் ஒரு தீத்தொழில் மட்டும் அவர்களிடம் இல்லாதிருந்தால், அவர்களுடைய பகைவரும் அவர்கள் இருக்கும் திக்கை நோக்கித் தொழுவர்;
அவ்வாறின்றி, அவர்கள் எத்தனை அறச்செய்கைகள் உடையவர்களாயிருந்த போதிலும், அத்தீத்தொழிலைக் காவாதவர்களாயின், மகளிர் இன்பத்திலேயே மூழ்கி நிற்கும் காமுகரும் அவர்களைப் பற்றிப் பழிமொழி கூறுவார்கள்.
விளக்கம்:
இணைவிழைச்சு - கூட்டம்: இருபாலரும் விரும்புதலின் இணைவிழைச்சு எனப்பட்டது.
எவ்வினையரேனும் என்றது துறவிகள் விலக்க வேண்டிய தீச்செயல்களை: அவையாவன: கோபம், நிந்தை, பிச்சை வாங்குதல் முதலியன.
தூர்த்தலாவது ஈண்டுப் பழியை மிகுதியாகப் பரப்புதல்
கருத்து:
பெண்ணாசை அற்ற மக்களைப் பகைவரும் கை கூப்பி வணங்குவர்; இன்றேல், அவர்களை யாவரும் பழிப்பர்.