யார்மாட்டும் கொள்ளாமை வேண்டும் பகை – நான்மணிக்கடிகை 86
இன்னிசை வெண்பா
கள்ளாமை வேண்டும் கடிய வருதலால்;
தள்ளாமை வேண்டுந் தகுதி யுடையன;
நள்ளாமை வேண்டுஞ் சிறியரொடு; யார்மாட்டும்
கொள்ளாமை வேண்டும் பகை 86
- நான்மணிக்கடிகை
பொருளுரை:
அஞ்சத்தக்க துன்பங்கள் பின்பு வருதலால் பிறர்பொருளைத் திருடாமை வேண்டும்; தமக்குத் தகுதியுடைய ஒழுக்கங்களைத் தவிராமை வேண்டும்; சிற்றினத்தாரோடு நட்புக் கொள்ளாமை வேண்டும்; யாரிடத்திலும் பகையைப் பாராட்டாமை வேண்டும்.
கருத்து:
கொடுந்துன்பங்கள் பின்பு உண்டாதலால் என்றுந் திருடாமை வேண்டும்; தகுதியுடைய ஒழுக்கங்களைத் தவிராமை வேண்டும்; சிற்றினத்தாரோடு சேராமை வேண்டும்; யாரிடத்திலும் பகை கொள்ளாமை வேண்டும்.
விளக்கவுரை:
நள்ளாமை - நெருங்காமை; யார்மாட்டுமென்பது இளைத்தார் மாட்டு.