உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும் பேராண்மை இல்லாக் கடை – நாலடியார் 199
இன்னிசை வெண்பா
தீங்கரும்(பு) ஈன்ற திரள்கால் உளையலரி
தேங்கமழ் நாற்றம் இழந்தாஅங்(கு) - ஓங்கும்
உயர்குடி யுட்பிறப்பின் என்னாம் பெயர்பொறிக்கும்
பேராண்மை இல்லாக் கடை 199
- தாளாண்மை, நாலடியார்
பொருளுரை:
இனிப்பாகிய கருப்பங் கழியிலிருந்து தோன்றிய திரண்ட தாளையுடைய பிடரிமயிர் போன்ற மலர் தேனோடு கூடி மணக்கும் நறுமணத்தை இழந்தாற்போல்,
தன்புகழைச் சான்றோர் எழுதி நிலைநிறுத்துதற்குரிய அரிய முயற்சித்திறம் இல்லாவிட்டால் மிக்க உயர்குடியுட் பிறத்தலால்.மட்டும் யாது பயனுண்டு?
கருத்து: அரிய முயற்சித்திறம் இல்லாதபோது உயர் குடிப் பிறப்பும் இனிய தோற்றமும் இருத்தலால் மட்டும் பயனில்லை.
விளக்கம்:
உளையென்றது ஈண்டுக் குதிரை சிங்கம் முதலியவற்றின் பிடரிமயிர் போல் மென்மையும் செறிவுமுடைய குஞ்சம்; இதனாற் சாயலுடைய தோற்றம் பெறப்பட்டது!
அலரி "முல்லை அரும்பவிழ்அலரி"1 என்புழிப் போலப் பொதுவாக மலரென்னும் பொருட்டு,
‘தேங்கமழ் நாற்றம்' என்பதில் தேன் பெயர்க்கும் நாற்றம் ஆண்மைக்கும் ஒக்கும்.
‘கரும்பு ஈன்ற' என்றார், உயர்குடியுட் பிறந்தும் என்றற்கு.
‘நாற்றம் இழந்தாங்கு ஆண்மையிலாக்கடை' யென்க;
பொறித்தல், நூலிலுங் கல்லிலுமாம்!.