யானை வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள் அரிமா மதுகையவர் – நாலடியார் 198
நேரிசை வெண்பா
ஈனமாய் இல்லிருந் தின்றி விளியினும்
மானந் தலைவருவ செய்பவோ? - யானை
வரிமுகம் புண்படுக்கும் வள்ளுகிர் நோன்றாள்
அரிமா மதுகை யவர் 198
- தாளாண்மை, நாலடியார்
பொருளுரை:
யானையினது புள்ளிகளையுடைய முகத்தைப் புண்படுத்த வல்ல கூரிய நகங்கள் பொருந்திய வலிய கால்களையுடைய சிங்கத்தைப் போன்ற முயற்சி வலிமையுடையோர் நிலை குறைவாகி வீட்டில் அலுவலில்லாது தங்கி வருவாயின்றி இறக்க நேரினும்,
குற்றம் உண்டாகக் கூடிய செயல்களைச் செய்வார்களோ? செய்ய மாட்டார்கள்!
கருத்து:
முயற்சியுடையார்க்கு எந்நிலையிலும் பழிப்புக்குரிய தீச்செயல்கள் செய்யும்படி நேராது.
விளக்கம்:
மதுகை – முயற்சி, வலிமை.
‘வள்ளுகிர் நோன்றாள்' என்னும் உவமைக்கேற்பப் பொருளிற் கூரறிவும் தக்க செயல் வாய்ப்புமுடைய மதுகையவர் எனவும், பொருளில் ‘இல்லிருந்து இன்றி விளியினும்' என்றதற்கு ஏற்ப உவமையிற் குகையில் தங்கி உணவின்றி இறக்கினும் எனவும் உரைத்துக் கொள்க.