பள்ளியில் சிரிப்பு
ஆசிரியர்: இந்த கணக்கை நீயே தான் போட்டாயா?
மாணவன்: ஆமாம் சார். எங்க அப்பா சொல்லி தரவில்லை.
&&&
ஆசிரியர்: உனக்கு பிடித்த பாடம் எது, பிடிக்காத கோளம் எது?
மாணவன்: பிடித்த பாடம் பூகோளம். பிடிக்காத கோளம், கணக்கு தேர்வில் கிடைக்கும் கோளம்.
&&&
விஞ்ஞான ஆசிரியர்: ஒரு வேளை ஐன்ஸ்டீன் நேரில் வந்தால், அவரிடம் நீ என்ன கேட்பாய்?
மாணவன்: உங்களுக்கெல்லாம் வேற வேலையே இல்லையா, சார்
ஆசிரியர் (கோபமாக): ஏன்டா தடியா, என்னை பார்த்து நீ இந்த கேள்வியை கேட்கிறாயா?
மாணவன்: சார், இந்த கேள்வியை நான் ஐன்ஸ்டீனிடம் தான் கேட்பேன்.
ஆசிரியர்:???
&&&&
ஆசிரியர்: நீ பெரியவன் ஆன பிறகு என்ன ஆகவேண்டும் என்று கனவு காண்கிறாய்?
மாணவன்: ஆசிரியர்கள் இல்லாமல், பள்ளிகளில் எப்படி பாடம் சொல்லித் தரலாம் என்று.
&&&
ஆசிரியர்: உனக்கு தான் சுட்டு போட்டாலும் கணக்கு வரவில்லை. நீ வருங்காலத்தில் என்ன செய்ய போகிறாய்?
மாணவன்: ஒரு அரசியல் வாதியாக மாறி, பணத்தை எண்ண, மனக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறேன்.
&&&
ஆங்கில ஆசிரியர்: உன் தாய் மொழி என்ன, என்று ஆங்கிலத்தில் எப்படி கேட்க வேண்டும்?
மாணவன்: அட, இது கூட உங்களுக்கு தெரியாதா சார்? நான் எங்க அப்பா கிட்ட கேட்டு நாளைக்கு சொல்றேன் சார்.
&&&
ஆசிரியர்: உனக்கும் ஆங்கிலத்துக்கும் சம்பந்தமே இல்லை.
மாணவன்: அது இன்னா சார் அவ்வளவு கரீட்டா சொல்லிட்டீங்க! நானும் இதைத்தான் உங்க கிட்ட கேக்கணும்னு நெனச்சிக்குவேன்.
&&&&
ஆசிரியர்: ஏன்டா மாங்கா மடையா, மனித பற்களை படமாக வரஞ்சிண்டு வான்னா, இருபத்தி ஒன்பது பற்களை மட்டுமே வரைந்திருக்கிறாய்?
மாணவன்: எங்க அம்மா, என் வாயைத் திறந்து, எண்ணி பார்த்து, எனக்கு இருபத்தி ஒன்பது பல்லு தான் இருக்குன்னு சொன்னாங்க.
&&&
உடற்பயிற்சி ஆசிரியர்: உடற்பயிற்சி செய்வதால் என்ன லாபம்?
மாணவன்: நன்றாக பசி எடுக்கும்.
உடற்பயிற்சி ஆசிரியர்: உடற்பயிற்சி செய்யாவிட்டால் என்ன நஷ்டம்?
மாணவன்: பெரிதாக நஷ்டம் ஒண்ணும் இல்லை. ஆறு தோசைக்கு பதில் ஐந்து தோசை தான் சாப்பிட முடியும்.
&&&
தமிழ் ஆசிரியர்: " எனிக்கும் ஒனிக்கும், இன்னிக்கி ராவு ஓடி பூட்சுன்னா, காத்தால கண்ணாலம் " இதை தூய தமிழில் எப்படி சொல்வது?
மாணவன்: "அழகிய இளம் மொட்டான என் தேன் சிட்டு உனக்கும், இளமை துள்ளி ததும்பும் கட்டழகுக் காளை எனக்கும், கொடுமையான தனிமை தரும், இன்று இரவு வந்து, மறைந்து, ஒளிந்து மறைந்தவுடன், கதிரவனின் செங்கதிர்கள் வந்து, நம்மை வாழ்த்தி, நாம் இருவரும் காலைக்கடன்களை நிறைவேற்றி, ஒளிரும் வண்ண ஆடைகளை அணிந்து, கைகோர்த்து அலங்கார தேரில் அமர்ந்து, ஊர்வலம் வந்து, நான் உன் இளந்தோளைக் கண்டு, இன்பம் கொண்டு, தோள் தொட்டு உனக்கு மணமாலை சூடியபின், என் ஆருயிர் ஆசை நாயகியான நீ, உன் பூப்போன்ற கரங்களால் என் வலிய தோள்களை, உன் பஞ்சு கைகளால் பற்றாமல் பற்றி, புதிய பூக்கள் சிரிக்கும் மணக்கும் மாலைதனை அணிவித்து, நம் அகமும் முகமும் மகிழ்ந்து, களித்து, இருவர் ஒருவராகி, உவகை கொள்ளும் அந்த பொன்னாள், நாளைய தினம், உவகை பொங்கும் நம் இனிய திருமண நாள்." அவ்வளவு தான் சார்!
(தமிழ் ஆசிரியர் மயக்கம் அடைகிறார்)
&&&

