மாறும் தேசம்

ஊழலில் கட்டிய ஊர் எல்லைப் பாலம்
ஊறுகின்ற எறும்புகளின் சுமை தாங்காது
இடிந்து கிடக்கிறது
முறையின்றி கட்டிய மூன்றடுக்கு மாடி
உதிர்ந்த முடி மோதி
உடைந்து கிடக்கிறது
காசு கொடுத்து வாங்கிய ஓட்டுநர் உரிமம்
சாலை செல்லும் மக்களை
சாவூருக்கு அழைக்கிறது
பணத்தால் அளந்து கொடுக்கப்பட்ட பட்டாவால்
என் பாட்டன் சொத்தெல்லாம்
எவன் பேரிலோ இருக்கிறது
பங்கு போக மீதியில் போடப்பட்ட சாலை
பங்குனியில் இருந்தது
சித்திரையில் காணவில்லை
இறந்தாலும் பிறந்தாலும்
இழக்காமல் இங்கு எதுவும் கிடைப்பதில்லை
அவனன்றி ஓர் அணுவும் அசையாது
ஆன்மீகம் சொல்லி தந்த நாடு
ஊழலின்றி ஒரு ஆணியும் இங்கு பிடுங்கப்படாது என்று
மாற்றத்தைமுன் வைத்து
மகத்தான தேசமாய் மாறி கொண்டிருக்கிறது!