உங்களுக்காக ஒரு கடிதம் 13
அன்பு பெற்றோரே,
ஆம். தோழா/தோழி,என்று இளைய வயதினருக்காக மட்டும் எழுதினால் அது சரிப்பட்டு வராது. அவர்களுக்கு மட்டும் ஆலோசனைகளும்...அட்வைஸ்களும் ..ஏனென்றால் அவர்கள் நம்மைவிட வயதில் சின்னவர்கள். நாம் சொல்வதை அவர்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்கின்ற ஒரு அடக்குமுறை....ஒரு சர்வாதிகாரத்தனம்... ஒரு ஆணவப்போக்கு ஜமீன்தாரிசம்... ஜமீன்தார்கள் ஒழிந்து நூற்றாண்டுகள் கழிந்தாலும் தெரிந்தோ தெரியாமலோ அதை பின்பற்றுகிறோம், அதுவும் நாம் பெற்ற பிள்ளைகளிடமே. இது எந்த விதத்தில் நியாயம்?
அதுக்கென்ன செய்வது? நமக்குத்தான் அந்த வயதில் அறிவில்லாமல் போய்விட்டது. நம் மூத்தவர்கள் சொன்னதை நாம் கேட்காமல் போனதால்தானே இப்போ இவ்வளவு கஷ்டப்படுகிறோம். அந்த கஷ்டங்களை அவர்கள் படக்கூடாதென்றுதானே அவர்களுக்கு சொல்கிறோம். நாங்கள் பெற்ற அந்த அடி...அவமானங்கள்....தோல்விகள்....என்று நாங்கள் எங்கள் வாழ்க்கையையே தொலைத்து விட்டு நிற்கிறோமே. அதைப்பார்த்து அவர்கள் சுதாரித்துக் கொள்ள வேண்டாமா? என்று நம் வயதினர் சால்ஜாப்பு கட்டுவது எனக்கு புரிகிறது.என்னையும் உங்களோடு சேர்த்துக்கொள்ளுங்கள். அதாவது நமக்கு புரிகிறது. நாமும் அந்த வயதினைக் கடந்துதான் வந்திருக்கிறோம். இப்போதுதான் அந்த வயதில் அறிவில்லாமல் போனது நமக்கே உரைக்கிறது. காலம் கடந்து போனபின் சூரிய நமஸ்காரம். நம் பிள்ளைகள் நம்மோடு வாதிட மாட்டார்களா? உங்களுக்கு ஒரு நியாயம்? எங்களுக்கு ஒரு நியாயமா? என்று. கொஞ்சம் நிதானமாக யோசிப்போம். அட....நிதானம் வந்துவிட்டதுதானே. இன்னும் வரவில்லையென்றால் அது நம் குற்றமே அன்றி நம் பிள்ளைகள் குற்றம் இல்லை. இதை புரிந்து கொண்டு பின் நம் கஷ்டங்களை பகிரலாம்.
ஒன்று மட்டும் நிச்சயம். நாம் பார்த்த உலகம் வேறு. நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இந்த உலகம் வேறு. இந்த வேறுபாட்டினை....அதாவது இந்த தலைமுறை இடைவெளியை..... " ஜெனெரேஷன் கேப் " புரிந்துகொள்ளாதவரை இந்த இடைவெளி பெரிதாகிக் கொண்டே போகுமே தவிர ...இந்த பிரச்சனைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. இந்த தலைமுறைக்கு வேகம் அதிகம். எதையும் உடனே அனுபவிக்க வேண்டும் என்கின்ற அவசரம்...ஒரு துடிப்பு.முடிவை பற்றி சிறிதும் கவலைப் படாத வயசு. இத்தனை அனுபவப்பட்ட நமக்கே பொறுமை இல்லாத போது அவர்களிடம் நாம் உடனே எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனம். ஆனால் நம் அனுபவங்களை இளைய தலைமுறையினருக்கு கொண்டு சேர்ப்பது மிகமிக அவசியம்..நம் கடமையும் கூட. அதை எப்படி கொண்டு சேர்ப்பது? சில சமயம் நமக்கு சாதகமாய் நடக்கும்...பல சமயம் பெரும் பாதகமாய் முடியும். இதே குழப்பம்தானே நம் பெற்றோருக்கும் இருந்திருக்கும் ? நாம் அவர்களுக்கு அடங்கினோமா? இல்லை அவர்கள் சொல்லுக்குத்தான் கட்டுப்பட்டோமா? சொல்லப்போனால் " இல்லை " என்பது நம் மனசாட்சிக்கு நன்றாகவேத் தெரியும். என்ன செய்வது? பொறுமையாய் உட்கார்ந்து நம் பிரச்சினை என்ன? அவர்கள் பிரச்சனை என்ன? இதை எப்படி சுமூகமாக கையாள்வது? வெற்றிகரமாக நம் எண்ணங்களை...கனவுகளை.... ஏக்கங்களை...அவர்களிடம் கொண்டுசேர்ப்பது என்று மண்டையை போட்டு உடைத்துக்கொள்ளலாம். இப்படியா...அப்படியா.... என்று ஆலோசிக்கலாம். எப்படியாவது கொண்டு சேர்த்தால் சரி. முடியுமா? பில்லியன் டாலர் கேள்வி? பதில்...
தொடருவோம்.