வினைப்பயன்கொல் குலமில்லார் தறுகட்பம் இல்லார்பின் சென்ற நிலை – அறநெறிச்சாரம் 110

இன்னிசை வெண்பா

குலத்துப் பிறந்தார் வனப்புடையார் கற்றார்
நினைக்குங்கால் நின்றுழியே மாய்வர் - வினைப்பயன்கொல்
கல்லார் குலமில்லார் பொல்லார் தறுகட்பம்
இல்லார்பின் சென்ற நிலை 110

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

உயர்குடியிற் பிறந்தவர்களும், அழகுடையவர்களும், கற்றவர்களும் மானமழிந்ததை நினைக்குமிடத்து நின்ற இடத்திலேயே உயிர்விடக் கூடியவர்களுமாகிய பெரியோர்கள்

கல்லாதவர்களும், இழிகுலத்தவர்களும், தீயவர்களும், தீவினை செய்ய அஞ்சாதவர்களுமாகிய செல்வமுடைய இழிந்தோர்களை வழிபட்டு நிற்பதற்குக் காரணம் அவர்கள் முன்செய்த தீவினைப் பயன்தானே?

குறிப்பு:

செல்வமானது சில வேளைகளில் மானிகளையும் மயக்கிவிடுகின்றது என்பது கருத்து. தறுகட்பம்: பெருமையெனலுமாம். கொல்: ஐய வினாப் பொருள்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-22, 11:50 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 25

மேலே