தீமையினை நன்மையினாலே வெல் – அறநெறிச்சாரம் 109

நேரிசை வெண்பா

ஒறுப்பாரை யானொறுப்பன் தீயார்க்கும் தீயேன்
வெறுப்பார்க்கு நான்மடங்கே என்ப - ஒறுத்தியேல்
ஆர்வம் மயக்கம் குரோதம் இவைமூன்றும்
ஊர்பகை நின்கண் ஓறு 109

– அறநெறிச்சாரம்

பொருளுரை:

நெஞ்சே! என்னைத் துன்புறுத்துகின்றவர்களை யான் துன்புறுத்துவேன் எனவும், கொடியவர்களுக்குக் கொடியவனாவேன் எனவும், வெறுப்பவர்களை நான்கு மடங்கு வெறுப்பேன் எனவும் உலகத்தார் கூறுவர்.

நீ இவற்றை மேற்கொண்டு பிறரை அடக்கக் கருதுவாயாயின் ஆசை அறியாமை வெகுளி என்னும் மூன்றும் நின்னை மேற்கொள்ளும் பகைகளாகத் தோன்றும்; ஆதலின் உன்னிடத்து அவை உளவாகாவாறு அடக்கு.

குறிப்பு:

ஊர் பகை: ''அடிக்கு அடி; குத்துக்குக் குத்து; பொய்க்குப் பொய்; கோளுக்குக் கோள்;'' என்ற கூற்று மக்களிடைப் பெருங் குழப்பத்தினை உண்டாக்குமாகலின், எக்காலும் பொறுமையினை மேற்கொள்ளல் மக்களுக்கு இன்றியமையாதது என்பது கருதது.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-May-22, 11:43 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 23

மேலே