பெடல் செய்யாமல் எப்படி சைக்கிளை ஓட்டலாம்

டெல்லியில் பல வருடங்கள் வாழ்ந்த என் அண்ணனின் வாழ்க்கையில் ஒரு சுவாரசியம். அவன் வீட்டிற்கு ஒரு மிகவும் வயதான புரோகிதர் ஒருவர் வந்து அவன் வீட்டில் நடக்கும் சடங்குகளை நடத்தி கொடுப்பார். அவர் சைக்கிளில் தான் வருவார். என் அண்ணண் நினைப்பானாம் " பாவம், இந்த வயதிலும் சைக்கிளை மிதித்துக்கொண்டு இரண்டு மூன்று கிமீ தூரம் வருகிறார்" என்று. ஒரு முறை அவர் மிகவும் களைத்து அவன் வீட்டிற்கு வந்தபோது , சூடாக காபியை கொடுத்துவிட்டு " என்ன மாமா, சைக்கிள் பெடல் செய்ததால் மிகவும் களைத்து விட்டீர்களா" என்று அவரிடம் கேட்டபோது " சைக்கிளை யார் பெடல் பண்ணுவது. அதை சும்மா தள்ளிக்கொண்டு தான் செல்வேன்" என்றாராம். என் அண்ணண் " இன்று மட்டுமா, எப்போதுமேவா?" என் வினவியபோது " பல வருடங்களாக நான் சைக்கிளை தள்ளிக்கொண்டு தான் செல்கிறேன். ஏனெனில் , என்னால் பெடல் செய்வது கடினம்" என்றராம். அண்ணண் வியப்புடன் " அப்படி என்றால், வெறுமனே நடந்து வரலாமே , சைக்கிளையும் இழுத்துக்கொண்டு வந்தால் மிகவும் சிரமம் தானே" கூறியபோது, அந்த புரோகிதர் சொன்னாராம் " சைக்கிளை தள்ளிக்கொண்டு வரும்போது , என்னுடன் யாரோ ஒருவர் சேர்ந்து துணைக்கு வருவது போல இருக்கிறது. இன்னொன்று, அடிக்கடி சைக்கிள் டயர்களுக்கு காற்று அடிகிக்கவேண்டாம். அந்த செலவு மிச்சம். இதை தவிர இன்னொரு விஷயம், சைக்கிளை பெடல் செய்து ஓட்டும்போது, சில நாய்கள் குறைகிறது, சில நாய்கள் துரத்துகிறது. வெறுமனே சைக்கிளை தள்ளிக்கொண்டு செல்லும்போது " பாவம், எவனோ முடியாதவன்" என்று நாய்களும் கண்டு கொள்ளாது." இப்படி அவர் சொல்லி முடித்தவுடன் என் அண்ணண் சிரித்தானாம், அதே நேரத்தில் அவரது தனிமையை நினைத்து வருந்தினானாம்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (21-May-22, 4:47 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 115

மேலே