சொர்க்கத்தில் மிதக்கும் நரகம்
கற்றுப்பெறு தற்குத் தகவுள
உற்றப்பத விக்குட் படவென
கப்பப்பொரு ளிட்டுப் பெறுகிற
முறையாலே
*
வெற்றுப்பய லிற்குப் பதவியு
மெட்டிப்பெற விட்டக் குறைநமை
விற்றுத்தினு மற்பத் தனமெனு மரசாயே
*
சொத்துக்குவி தற்குத் தகவுள
மொத்தத்துறை கட்குப் புகவுள
சொத்தைக்கலை கற்றத் தலைமைக ளெனவாயே
*
முத்துக்குவி யற்குச் சமமுள
சொக்கத்தகு சொத்தைக் களவுற
வெட்கத்தினை விட்டுத் திரிகிற தறிவீரே
*
மக்கட்குறை கட்குச் செவியது
பொத்திக்கொளு தற்குச் சமமுள
மட்டச்செய லுற்றுக் கொளுமன சுடையோரே
*
விக்கிக்கொளு தற்குக் குடியென
வெற்றுக்குட மிட்டுத் தலைமுறை
வெட்கப்பட விட்டத் தலைவரு மிவராமே
*
சட்டத்துறை கட்குத் திரையிட
சுற்றத்தொடு சுற்றித் தமதென
சட்டத்தினை கைப்பைக் கிடுகிற நரியாயே
*
இட்டப்படி மக்கட் பணமதை
இட்டுக்கொடி கட்டிப் பொலிவொடு
எட்டுத்திசை விட்டுச் சுகமுட னலைவாரே!
*