அகலமுடைய அறிவுடையார் நாப்பண் புகலறியார் புன்சொல் விளம்பல் - பழமொழி நானூறு 115
நேரிசை வெண்பா
அகலம் உடைய அறிவுடையார் நாப்பண்
புகலறியார் புக்கவர் தாமே - இகலினால்
வீண்சேர்ந்த புன்சொல் விளம்பல் அதுவன்றோ
பாண்சேரிப் பல்கிளக்கும் ஆறு. 115
- பழமொழி நானூறு
பொருளுரை:
கல்வி கேள்விகளில் விரிவுடைய இயற்கை அறிவினார் இடையில் நுழைதற்குத் தகுதியற்ற கயவர்கள் புகுந்து (தம் சொற்களை யாரும் விரும்பாமல் இருக்கவும்) தாமே மாறுபாட்டினால் வீணான பயனற்றவற்றைக் கூறுதல் பாணர்கள் தெருவில் ஒருவன் வாய்திறந்து பாடுவதைப் போல அஃது ஆகுமல்லவா!
கருத்து:
கற்றாரிடைக் கல்லார் வீண் வார்த்தைகளைப் பேசாதொழிதல் வேண்டும்.
விளக்கம்:
பல்கிளத்தல் - வாய்திறந்து பாடுதல், அவர் இழிவு தோன்றப் பல்கிளத்தல் என்றார்.
'பாண் சேரிப் பற்கிளக்கும் ஆறு' - இஃது இச் செய்யுளில் வந்த பழமொழி.