நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை – நாலடியார் 221
இன்னிசை வெண்பா
நல்லார் எனத்தாம் நனிவிரும்பிக் கொண்டாரை
அல்லார் எனினும் அடக்கிக் கொளல்வேண்டும்
நெல்லுக்(கு) உமியுண்டு, நீர்க்கு நுரையுண்டு
புல்லிதழ் பூவிற்கும் உண்டு 221
- நட்பிற் பிழைபொறுத்தல், நாலடியார்
பொருளுரை:
நல்லவர் என்று தாம் பலவகையில் ஆராய்ந்து மிகவும் நேசித்துக்கொண்டவரைப் பின்பு ஒருநேரம் அவர் நல்லவரல்லாராய் பிழைபட்டாரெனினும் அதனைப் பொறுத்து அவரைத் தம்மிடமே இணக்கிக் கொள்ளல் வேண்டும்;
ஏனென்றால், பயன்படுதலுடைய, நென்மணிக்கு அதிலிருந்து நீக்குதற்குரிய உமியுண்டு, அவ்வாறே நீர்க்கு நுரையுண்டு, பூவிற்கும் புறவிதழ் உண்டு.
கருத்து:
உலகத்திற் குற்றமிருத்தல் இயற்கையாகலின், நண்பரிடத்து அதனைப் பாராட்டுதலாகாது.
விளக்கம்:
நல்லார், உயர்ந்த இயல்பினர்;
நனிவிரும்பிக் கொள்ளல் – அணுக்கமாக நேசித்துக் கொள்ளுதல்;
அல்லாரென்றது, இங்கே பிழைபட்டாரென்னும் பொருட்டு.
நெல், நீர், பூவென வந்த உவமம், மக்கள் முதன்மையாகக் கருதி உண்ணுவன பருகுவன அணிவனவான பொருள்களிலும் குறைகள் உண்டெனப் புலப்படுத்தி நின்றது.
புல்லிதழ், புன்மையுடைய இதழ்: புன்மையாவது, மணமும் நிறமுமில்லாச் சிறுமை,