வெறுப்பச் செயினும் பொறுப்பரே தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு – நாலடியார் 222

இன்னிசை வெண்பா

செறுத்தோ(று) உடைப்பினுஞ் செம்புனலோ(டு) ஊடார்.
மறுத்துஞ் சிறைசெய்வர் நீர்நசைஇ வாழ்நர்
வெறுப்ப வெறுப்பச் செயினும் பொறுப்பரே
தாம்வேண்டிக் கொண்டார் தொடர்பு 222

- நட்பிற் பிழைபொறுத்தல், நாலடியார்

பொருளுரை:

நீரின் நன்மையை விரும்பி வாழ்வோர் வயலில் அதனைக் கட்டுந்தோறும் அஃது உடைத்துடைத்துச் செல்லும் இயல்பினதாயினும் அப் புதுப்புனலோடு சினத்தல் செய்யாராய் மீண்டும் மீண்டும் அதனை மடைகட்டிப் பயன்படுவர்;

உயர்ந்தவரென்று தாம் முன்னர் விரும்பி நட்புச் செய்து கொண்டவரது தொடர்பினைப் பின்பு அவர் வெறுத்தற்குரிய பிழைகளை வெறுப்புண்டாகும்படி செய்தாலும் அவற்றைப் பொறுத்து மேற்கொள்வர்.

கருத்து:

சிறந்த நண்பர்கள் தம்மிடம் பலகாற் குற்றஞ் செய்ய நேர்ந்தாலும், அவர் தம் உயர்வு கருதி அவர்கள் தொடர்பினை மேற்கோடல் வேண்டும்.

விளக்கம்:

செறுத்தோரென்னும் பயில்வுப் பொருளால் மறுத்துமென்பதற்கு அடுக்குப் பொருள் உரைக்கப்பட்டது.

செறுத்தல், ஈண்டு மடைகட்டுதல். ஊடாமைக்கு நீரினால் உண்டாங் கிளர்ச்சியும் ஓர் ஏதுவாகவின், புதுப்புனல் நுவலப்பட்டது.

செம்மை, புதுமைமேற்று; "தாம் வேண்டிக் கொண்டார்" என்றார், அவர் தம் உயர்வால் தமது உள்ளம் பிணிப்புண்டமை தோன்ற. தொடர்பு என்னும் முடிபாற் 'பொறுப்பர்' என்பதற்குப் பொறுத்து மேற்கொள்வரென்று பொருளுரைத்துக் கொள்க.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-May-22, 1:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே