36 ஆன்மீக வழியில் அமைதி

அத்தியாயம் – 36
ஆன்மீக வழியில் அமைதி...
எழுத்தாளர் :பூ.சுப்ரமணியன்

நாம் மோட்சத்தினை அடைவதற்கு விவேகம் விதை போன்று செயல்படுகிறது. நமது வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவைகளான பணம் படிப்பு வேலை ஆகியவற்றை துறக்க வேண்டும் என்று எந்த இந்து சாஸ்திரமும் இதிகாசங்கள் புராணங்கள் அறிவுறுத்தவில்லை. வாழ்க்கைக்கு அடிப்படையானவைகள் அவசியம் தேவை ஆகும். அவைதான் உலக வாழ்க்கைக்கு மிகவும் பாதுகாப்பானது ஆகும்
உன் உலக கடமைகள் பூர்த்தியான பிறகு ஆன்மீக சாதனைகளில் ஈடுபட்டு மோட்சம் அடைவதற்கு உரிய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிலபேர் வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான பிறகும் அதில் மயங்கி மூழ்கி விடுகிறார்கள். அதிலிருந்து விடுபட அவர்களது மனம் விரும்புவதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு விவேகம் என்ற ஞானம் வந்து விடும்போது அவர்கள் உலக வாழ்க்கையில் திருப்தி அடைந்து விடுவார்கள். மீண்டும் அவர்கள் மீண்டும் உலக இன்பங்களில் ஈடுபடுவதற்கு விரும்புவதில்லை.

வாழ்க்கையின் அடிப்படை தேவைகளை விட்டுவிட்டு துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரங்கள் எதுவும் கூறவில்லை. உண்மையில் ஞானம் மோட்சம் அடைவதற்கு விரும்புகின்றவர்கள் உலகில் உள்ள இன்பங்களில் அவன் அனுபவிக்க நேர்ந்தாலும் மோட்சம் என்னும் ஞானம் அடைய வேண்டும் என்னும் விவேகம் அவனுக்குத் துணை புரியும். உலகில் ஆசைகளுக்கு முடிவே இருக்காது. நாம்தான் போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து என்று உலக இன்பங்களிலிருந்து விலக வேண்டும். அவ்வாறு விலகினால்தான் நாம் ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண முடியும். உலக இன்பங்களில் தாமரை இலைத் தண்ணீர்போல் இருந்து வாழ்ந்து பழக வேண்டும்.

நாம் சத்சங்கத்தில் கலந்து கொண்டால் மோட்சம் என்ற உயர்நிலை அடைவதற்கு ஓரளவு அவை துணை புரியும். நாம் எதில் ஆசை கொள்ள வேண்டுமோ அதில் மட்டும் ஈடுபட்டு ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண வேண்டும். ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைவதற்கு சத்சங்கம் நமக்கு வழிகாட்டுகிறது. அதேபோல் ஆன்மீக வழியில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களிடம் நட்பு கொண்டு அதன் மூலம் நாம் ஆன்மீக அனுபவங்களை பெறவும் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். சத்சங்கத்தில் அடிக்கடி கலந்து கொள்ள வேண்டும். அவ்வாறு சத்சங்கத்தில் கலந்து கொள்ளும்போது ஆன்மீக அன்பர்கள் அவர்கள் பெற்ற அனுபவங்களை நம்மிடம் கூறுவதைக் கேட்டு அதன்படி வாழ்ந்து நாமும் ஆன்மீக வழியில் அமைதி காணலாம்.

நமது மனம் சஞ்சலத்தில் இருக்கும்போது அவற்றிலிருந்து விடுபடுவதற்கு சத்சங்கம் ஒரு வடிகால்போல் துணைபுரியும். நமது மனதிற்கு ஒரு ஆறுதல் கிடைப்பதோடு ஒரு தெளிவான தீர்வு கிடைக்கும். நமது மனம் பஞ்சுபோல் இலேசாகும். நாம் கோவிலுக்குச் சென்றால் இறை சிந்தனையில் இருக்கும்போது, நமது மனம் எப்படி தேவையற்ற எண்ணங்கள் ஏற்படுவதில்லையோ, அதேபோல்தான் சத்சங்கத்தில் கலந்து கொள்ளும்போது இறைவனை மட்டும் நினைக்கச் செய்யும். ஆன்மிகம் பற்றி கருத்துக்கள் எண்ணும்படி செய்யும். ஆன்மீகப்பாடல்கள் இசை, புராணங்கள் இதிகாசங்கள் போன்றவை மட்டும் கேட்கும்படியாக இருக்கும். மனிதர்களை நல்ல செயல்களில் மட்டும் ஈடுபடச் செய்யும் என்பதை சத்சங்கத்தில் கலந்து அனுபவம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

இளம் செடியாக இருக்கும்போது அதனை வேலியிட்டு பாதுகாக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் ஆடுமாடுகள் மேய்ந்து அந்த செடியை அழித்து விடும். அதேபோல் இறைவனை அடைய வேண்டுமானால் ஆரம்பத்தில் சாது சங்கங்கள் கோவிலில் தெய்வ வழிபாடுகள் தேவை. வாழ்வில் இடையிடையே தனிமையில் வாழ்வது அவசியம். அப்போதுதான் இறைவனை அடைவதற்கு மிகுந்த ஆர்வம் ஏற்படும்.

மோட்சம் அடைவதற்கு நாம் தீவிர ஆசை கொள்ள வேண்டும். மோட்சத்தில் ஆசை அதிகரிக்க அதிகரிக்கத்தான் அது செயல்வடிவம் பெறுவதற்கு முடியும். உலகில் எந்தப்பொருள் மீது ஆசை கொள்கிறமோ அதன் சம்பந்தப்பட்டவைகளை நாம் நாடிச் செல்வோம். எடுத்துக்காட்டாக ஒருவர் சங்கீத வித்வான் ஆக வேண்டும் என்று விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம் அவர் பெரும்பாலும் சங்கீதம் தொடர்பானவைகளே நாடுவான். அவர் சங்கீதத்தில் தேர்ச்சி பெற்ற குருவை நாடுவான். அவர் சங்கீதம் சம்பந்தப்பட்ட நூல்களை தேடிச்சென்று வாங்கிப் படிப்பார்கள். அவர் குரல் வளம் பெறுவதற்குரிய சாதனைகளை சங்கீத வித்வான்களை கேட்டு அதனை மேற்கொள்வார்கள். இதேபோன்றுதான் மோட்சம் அடைவதற்கு ஆன்மீகத்தில் முன்னேறுவதற்கு தேவையான வழிமுறைகளைத் தேடித் தேடி ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

சிலபேர் மோட்சம் அடைய வேண்டும் என்று விரும்புவார்கள் ஆனால் அதில் தீவிர ஆசையோ முயற்சியோ மேற்கொள்வதில்லை. காரணம் மோட்சம் அடைவதற்கு உண்மையிலே அவர்கள் மனதளவில் விரும்புவது இல்லை. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் என்பதை மனதில் கொண்டு மோட்சம் அடைவதற்கு மன அமைதி பெறுவதற்கு முயற்சியை மேற்கொள்ள வேண்டும். சிலபேர் ஆன்மீகப் பயிற்சியை செய்வதற்கு முயற்சி செய்வார்கள் அதில் விடாமுயற்சியுடன் நம்பிக்கையுடன் ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொள்வதில்லை. ஒருவன் ஐம்பது அடியில் தண்ணீர் வந்து விடும் என்ற எண்ணத்தில் நிலத்தினை தோண்ட ஆரம்பிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம்.

நாற்பத்தொன்பது அடிகள் வரை தோண்டி விட்டு மனம் சலிப்படைந்து இன்னும் ஒரு அடியில் எப்படி தண்ணீர் வரும் என்று தோண்டுவதை நிறுத்தி விட்டு வேறொரு இடத்தில் தோண்ட ஆரம்பித்து விடுகிறான். ஆனால் மற்றொருவன் அதே இடத்தில் ஒரு அடி தொண்டியவுடன் அந்த இடத்தில் தண்ணீர் வந்து விடுகிறது. நாற்பத்தொன்பது அடி தோண்டியவனுக்கு ஒரு அடி தோண்டி முடிப்பதற்குள் பொறுமையில்லாமல் வேறு இடத்தில் தோண்டுவதற்கு முயற்சி செய்து விட்டான். இதேபோல்தான் சிலபேர் பொறுமையில்லாமல் ஆன்மீகத்தில் முன்னேற வேண்டுமென்று பயிற்சி செய்கிறார்கள். சில மாதங்கள் பயிற்சியினை மேற்கொண்டு சலிப்படைந்து நம்பிக்கையின்மையால ஆன்மீகப் பயிற்சி மேற்கொள்வதையே விட்டு விடுகிறார்கள்.

ஆன்மீகத்தில் நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்பதை எப்படி தெரிந்து கொள்வது அல்லது உணர்ந்து கொள்வது. ஆன்மீகத்தில் உண்மையிலே நாட்டம் அடைந்தவர்களுக்கு முன்னேற்றம் காண்பவர்களுக்கு, உலகில் காணும் இன்பங்கள் பொருட்கள் மீது ஏற்படும் ஆசைகளில் நாட்டம் இயல்பாகவே குறைந்து விடும். ஆன்மீகப் பயிற்சியின்போது உலக இன்பங்கள் ஆசைகளில் மீண்டும் மீண்டும் மனம் ஈடுபட விருப்பப்பட்டால் ஆன்மீகத்தில் முன்னேறவில்லை என்பதை உணர்ந்து கொள்ளலாம். உலகத்தில் காணும் இன்பங்களில் உள்ள தீவிர ஆசை ஆன்மீகத்தில் இல்லை என்பது யதார்த்தமான உண்மை என்பதை நன்கு உணரலாம்.

ஆன்மீகத்தில் தீவிர நாட்டமிருந்தால் எந்த தடை வந்தாலும் உடல் அளவில் மனதளவில் தைரியம் கிடைக்கும். மேலும் சத்சங்கம் எங்கெல்லாம் நடக்கிறது என்பதை தேடி அதில் கலந்து கொள்வதற்கு மனம் நம்மையறியாமல் நாடும். சத்சங்கத்தில் ஆன்மீக அன்பர்கள் கூறும் ஆன்மீகப் பயிற்சியினை செய்வதற்கு மனம் ஆர்வம் ஏற்படும். அவ்வாறு ஆன்மீகத்தில் நாட்டமில்லை என்றால் வெளிப்படையாக கூறாமல் சத்சங்கத்தில் கலந்து கொள்ள முடியாமைக்கு ஏதாவது காரணம் கூறி தப்புவதற்கும் தட்டிக் கழிப்பதற்கும் நினைப்பார்கள். ஆன்மீகத்தில் எந்த அளவுக்கு நாட்டம் ஆசை இருக்கிறதோ அந்த அளவுக்கு அவன் செயல்பாடுகள் இருக்கும். அவ்வாறு ஆன்மீகத்தில் நாட்டம் இல்லை என்றால் செயல்பாட்டிலும் ஆர்வம் இருக்காது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

உலகில் நேர்மையாக இருத்தல், தர்ம நியதிப்படி வாழ்க்கையை நடத்துவது, உயிர் இரக்கம் கொள்வது அதாவது எல்லா உயிர்களும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற மனநிலையில் வாழவேண்டும். அதன்மூலம் நமக்கு ஆன்மீக வழியில் மன அமைதியும் கிடைக்கும். அவ்வாறு நாம் ஆன்மீக வழியில் உணர்வுபூர்வமாக வாழ்ந்துவரும்போது நமக்கு இறைவன் ஆன்மீகத்தில் முன்னேற்றம் அடைவதற்கு பெரிதும் துணைபுரிவார். இதனை நாம் அனுபவபூர்வமாக உணரமுடியும். இதனைத்தான் ஆன்மீக ஞானிகள் நாம் இறைவனை நோக்கி ஓரடி எடுத்து வைத்தால் இறைவன் நம்மை நோக்கி பத்தடி முன்னே வருவார் என்று கூறுவார்கள்.

பதினெட்டு சித்தர்கள் தங்கள் அனுபவம் மூலம் மனஅமைதிக்கு கண்டறிந்த அறிய பொக்கிஷம் தியானம் ஆகும். தியானம் என்பது மனதினை ஒருமுகப்படுத்துவது ஆகும். மனதில் உண்டாகும் எண்ணங்கள் ஒளியின் வேகத்தை விட அதிகமான வேகத்தினைக் கொண்டது என்று சித்தர்களால் கூறப்பட்டுள்ளது. தியானத்தின் தன்மை எப்படி இருக்கும் என்று ஸ்ரீராமகிருஷ்ணர் “ தராசில் ஒரு தட்டில் எடைகூடினால் கீழ்முள்ளும் மேல் முள்ளும் ஒரே நேர்கோட்டில் நிற்காது. கீழ் முள்தான் மனம், மேல் முள்தான் கடவுள். கீழ்முள் மேல் முள்ளுடன் ஒன்றுபட்டு நிற்பதுதான் தியானம் ஆகும்‘ என்று எளியமுறையில் விளக்கிக் கூறுகிறார்

மனம் தியானத்தில் அமர்ந்தவுடன் நமக்கு எண்ண அலைகள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். நமது வாழ்வில் கடந்து போன நிகழ்வுகள் இன்ப துன்பங்களை அப்போது நினைக்கச் சொல்லும். வாழ்வில் எதிர்காலத்தை நினைத்து பயமுறுத்தும் எண்ணங்களும் நம்மையறியாமல் வந்து கொண்டே இருக்கும். இதெல்லாம் தியானத்தின் தடைக்கற்கள் அல்லது இடர்பாடுகள். இந்த இடர்பாடுகளைக் கடந்து நமது மனம் நிகழ்காலத்தினை நினைத்துகொண்டே இருக்க வேண்டும். அவ்வாறு நினைத்துக் கொள்ளும்போது தியானம் கைகூடும். நாம் விடும் மூச்சுக்காற்றை கவனித்துக்கொண்டு தியானம் செய்யலாம்.

நாள்தோறும் காலை மாலை தியானம் செய்து வருவதால் நாம் விரும்பும் தேடும் மன அமைதி கிடைக்கும். தியானத்தின் மூலம் மனதை கடந்த காலத்திற்கு நமது எண்ணங்களை கொண்டு செல்லாமல் அவ்வாறு மனம் சென்றாலும் வலுக்கட்டாயமாக நிகழ் காலத்திற்கு கொண்டு வருவதற்குப் பழகவேண்டும். அதேபோல் மனதினை எதிர்காலத்திற்கு குரங்கைப்போல் தாவிச் செல்லும்படி விட்டு விடாமல் மனதினை நிகழ்காலத்திற்கே கொண்டு வருவதற்கு தியானப் பயிற்சியை தவறாமல், மேற்கொண்டால் நமது மனதிற்கு அமைதி கிடைக்கும்.

தியானத்தில் நாம் அமர்ந்திருக்கும்போது எண்ணங்கள் நதியைப்போல் மனமானது ஓடிக் கொண்டே இருக்கும். அதனை நாம் கிணற்று நீரினைப்போன்று ஓரிடத்தில் நிலைத்து நிற்கும்படி மனதிற்கு பயிற்சி அளிக்க வேண்டும். அதற்கு மூச்சுப்பயிற்சியினை மேற்கொள்ளலாம். நாம் விடும் மூச்சினை கவனித்து கொண்டே வரும்போது மனம் மற்ற உலக விஷயங்களில் செல்லாமல் தடுக்க முடியும். மூச்சுப்பயிற்சி எளிதுபோல் தோன்றும். நாம் மூச்சு விடுவதை அது வெளியே செல்லும்போதும் உள்ளே வரும்போதும் கவனித்துக் கொண்டே வரவேண்டும். அதனால் மனம் ஒரு நிலைக்கு வரும் என்று கூறுவதற்கு முடியாது.. மூச்சைக் கவனித்துக் கொண்டே இருக்கும்போது மனதில் எண்ணங்கள் வேறு எங்கு சென்றாலும் உடனே நம் விழிப்படைந்து எண்ணங்களை மூச்சினை கவனிப்பதிலேயே கவனம் செலுத்தினால், நம் தியானத்தின் மூலம் வாழ்வில் அமைதி கிடைக்கும்.

தியானம் செய்வது எப்படி என்று சிந்தித்துப் பார்த்தால், அமைதியான காற்றோட்டமான தனியறையில் அமர்ந்து தியானம் செய்ய வேண்டும். தியானம் செய்வதற்கு அதிகாலை நேரத்தில் பிரம்மமுகூர்த்த நேரமான அதிகாலை மூன்றரை மணிக்கு மேல் ஐந்து மணிக்குள் செய்வது நன்கு பயன் அளிக்கும். தினமும் நாம் குறிப்பிட்ட நேரத்தில் தியானத்தில் அமர்ந்து அரைமணி நேரம் தியானப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். தியானம் செய்வதால் நமக்கு மன அமைதி கிடைப்பதோடு மனதிற்கு ஒரு புத்துணர்ச்சியும் ஏற்படுவதை நமது அனுபவம் மூலம் உணரமுடியும்.

நாம் தியானம் செய்யும்போது நம்மையும் அறியாமல் நண்பர்கள் உறவினர்களின் நலம் பற்றி எண்ணினால் தியானத்தின் மூலம் நமக்கு அமைதி கிடைப்பதுபோல், சம்பந்தப்பட்ட நபருக்கும் அவர்கள் தியானம் செய்யாமலே நாம் செய்யும் தியானத்தின் மூலம் நன்மை மன அமைதி கிடைக்கும் என்று ஞானிகள் கூறுகின்றனர்.

மனம் அமைதியடையாவிட்டால் யோகம் கைகூடாது. யோகத்தை அசையாத சுடருக்கு ஒப்பிடலாம். காற்றின் வேகத்தால் தீபம் அசைகிறது அதேபோல் உலகியல் ஆசைகளால் மனம் சலனமடைகிறது. மனம் சஞ்சலப்படாமல் அமைதியாக இருந்தால் யோகம் கைகூடிவிட்டது என்று பொருள். தியானத்தின் மூலம் நாம் தேடும் விரும்பும் அமைதி கிடைக்கும். (அமைதி தொடரும்)

எழுத்தாளர் : பூ.சுப்ரமணியன்

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (23-May-22, 4:38 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 107

சிறந்த கட்டுரைகள்

மேலே