மூன்று ஆண்டுகள் முடிவு

நான் பதவி ஓய்வு பெற்று, நேற்றோடு சரியாக மூன்று ஆண்டுகள் ஆகிறது. திருமணத்திற்கு முன் என் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தேன். திருமணம் கொண்டபின், இதனுடன் திருமணநாளையும் மனைவியுடன் கொண்டாடி மகிழ்கிறேன். பதவி ஓய்வு பெற்ற பின்னர், ஒவ்வொரு பதவி ஓய்வு பெற்ற நாளையும் கொண்டாடி மகிழ்கிறேன். இப்படியாக பல கொண்டாட்டங்கள் வருடம் முழுவதும் இருந்தால் அது என் மனைவிக்கு கொஞ்சம் திண்டாட்டம் தான். இருப்பினும், அந்த திண்டாட்டத்தையே அவளும் கொண்டாட்டமாக நினைக்க தெரிந்துகொண்டுவிட்டாள்.
பதவி ஓய்விற்கு முன்பு எனக்கு அதிக ஓய்வு நேரம் கிடைத்தது. என்ன, ஏதாவது தவறாக எழுதிவிட்டேன் என்று யோசிக்கிறீர்களா? கண்டிப்பாக நான் பதவியில் இருந்தபோது எனக்கு ஓய்வு நேரம் அதிகம்தான். அலுவலகத்தில் எனக்கு பாதி நாள் வேலையே இருக்காது. (என் உயர் அதிகாரிகள் இப்படி நினைத்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன் " கொடுத்த வேலையையே ஏனோ தானோ என்று செய்பவனுக்கு, புதிய வேலைகளை எதற்கு கொடுத்து அவனையும் அந்த வேலையையும் துன்புறுத்தவேண்டும்"?). அலுவலகத்திலிருந்து வீடு திரும்பினால் , மனைவி " பாவம் களைத்து வந்திருப்பார் என்று, பெரிதாக வேலைகள் எதுவும் கொடுக்கமாட்டாள். ஆனால் அவ்வப்போது கேட்பாள் " இன்று உங்க முகத்தில் களைப்பே இல்லையே , அலுவலகத்தில் வேலை அதிகம் இல்லை போல் தெரிகிறது". நான் அவளிடம் " ஆடிட்டிங் வேலை என்றால் அப்படி இப்படித்தான் இருக்கும்." என்று சமாளிப்பேன்.
பதவி ஓய்வு பெற்ற அடுத்தநாள் காலை, ஒரு நல்ல வேலையே செய்தேன். என் நண்பன் ஒருவனின் திருமணத்திற்கு சென்று வந்தேன் ( இருபத்திஆறு வயது இளைஞன் தான்) . சென்ற இடத்தில இன்னுமொரு உருப்படியான வேலையையும் செய்து வந்தேன், சாப்பிடுவது( மொய் எழுதிவிட்டுதான் சாப்பிடுவேனுங்கோ). இன்று பார்த்தால் , மூன்று வருடங்கள் உருண்டோடிவிட்டது.

ஒவ்வொரு நாளும் பலவேலைகள், காலையில் கண்விழித்து, பல் விளக்கி தேநீர் குடிப்பது; கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு இருந்துவிட்டு (தப்பாக ஒன்னும் நினைக்காதீங்க சாமி, தியானம் செய்வதைத்தான் குறிப்பிட்டேன்), இருப்பது அல்லது முப்பது நிமிடங்கள் நடை பழகிவிட்டு, சில நாட்களில் முடிந்தால் கைகளையும் கால்களையும் அசைத்துவிட்டு (எதை முடியுமோ அதைத்தானே அசைக்க முடியும்), பத்து நிமிடங்கள் மூச்சு பயிற்சி செய்துவிட்டு , பின்னர் இரண்டு டம்பளர் வெந்நீர் அருந்திவிட்டு அடுத்த 15 நிமிடங்கள் செல்போனுடன் கொஞ்சிவிட்டு (தண்ணீர் குடித்த உடனேயே குளிக்க முடியாது, அதனால் தான் நேரத்தை வீணடிக்காமல் இந்த செல்லுடன் கொஞ்சல்). பின்னர் குளித்துவிட்டு, சாமிக்கு முன் அமர்ந்து பத்து நிமிடங்கள் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்திரத்தை (சூரிய வழிபாடு) சொல்லிவிட்டு, சாமிக்கு பழம் ஏதேனும் நைவேத்தியம் செய்துவிட்டு சும்மா இருக்கலாம். ஆனால், இந்த வயிறு " கொஞ்சம் எனக்கு ஏதாவது தள்ளுங்க என்று சொல்லும்போது (தினமுமே) நம்மால் எப்படி சும்மா இருக்கமுடியும். இதை முன்னரே தெரிந்து கொண்டு மனைவி ஏதாவது செய்துவைத்திருப்பாள். அநேகமாக நவதானியத்தில் செய்யப்பட்ட ஏதாவது கஞ்சி இருக்கும். கூடவே கொஞ்சம் உலர்ந்த பழங்கள் இருக்கும். இதுதான் இந்த வயிற்றுக்கு ஆகாரம். அதன் பின்னர் மனைவிக்கு அவள் சமையல் வேலைகளை செய்ய கொஞ்சம் சக்தி கொடுக்க, நானே பில்டர் காப்பி தயார் செய்து கொடுப்பேன் (கொடுப்பவன் எடுத்தால் தவறு இல்லைதானே). அதன் பிறகு இரண்டு இரண்டரை மணி நேரம் பட்டினிதான். இதனிடையில் ஏதாவது மனதில் பட்டத்தை கிறுக்குவது, செல்போனிடம் மீண்டும் கொஞ்சுவது, இதுபோல சில்லறை வேலைகள் ஏதவாது செய்வேன். சரியாக மதியம் 12 மணிக்கு மனைவி " காக்கைக்கு அன்னம் போட்டு வாங்க" என்றதும், இரண்டாம் மாடியில் உள்ள என் வீட்டிலிருந்து, நான்காம் மாடிக்கு மேலே உள்ள மொட்டைமாடிக்கு படி ஏறி (அவ்வப்போது கால்கள் கெஞ்சி கேட்டால், மின்தூக்கி (lift ) மூலம்) செல்வேன். காக்கைக்கு அன்னமிட்ட பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்து , சமையல் செய்துவைத்துள்ள பாத்திரங்களை தரையில் எடுத்துவைத்து , நாங்கள் இருவரும் சாப்பிடும் தட்டுகளை கழுவி, தரையில் வைத்து, அதனுடன் டம்பளரில் நீர் எடுத்து வைத்து ( பாருங்கள், எவ்வளவு வேலை என்று), அதற்கு பிறகு தரையில் அமர்ந்து (உணவு சாப்பிட மேசை இருந்தாலும், அதிகமாக நாங்கள் தரையில் அமர்ந்துதான் சாப்பிடுவது, இது உடலுக்கும் நல்லது என்று பொதுவாக மருத்துவர்கள் சொல்வதை கருத்தில் கொண்டு), மனைவியுடன் சேர்ந்து உணவை பசித்து, ரசித்து, ருசித்து சாப்பிட்டுவிட்டு அதன் பின் உண்ட வாய்க்கு வாய்க்கு சோம்பு, நெல்லிக்கனி, பாக்கு போன்ற ஏதாவதை மெல்ல கொடுத்துவிட்டு சோபாவில் (மின்விசிறியை தட்டிவிட்டு) சென்று அமர்ந்தால் , ஆஹா, எவ்வளவு சுகமாக இருக்கும். உங்களுக்கும் இந்த அனுபவம் நிச்சயம் இருக்கும். கொஞ்ச நேரம் புத்தகம் படித்துவிட்டு, கொஞ்சம் உடம்பு " என்னை படுக்கைவிடுடா" என்று கேட்பதை தட்டாமல் செய்துவிட்டு எழும்போது மணி இரண்டரையோ மூன்றோ ஆகிவிடுகிறது. அதன் பிறகு கொஞ்சம் நீர் அருந்திவிட்டு, நானும் மனைவியும் 'சுடோக்கு' என்கிற எண்கள் புதிர் ஒன்றை செய்து முடிப்போம். அதன் பிறகு, உடம்பில் கொஞ்சம் சக்தி உண்டாக, இருவரும் காபி கொஞ்சம் குடிப்போம். மீண்டும் கொஞ்ச நேரம் படிப்பது, , மனதில் தோன்றும் கற்பனைகளை எழுத்து வடிவில் ஓரளவுக்கு கொண்டு வர முயற்சிப்பது போன்ற சின்ன சின்ன வேலைகள் செய்வேன். அதன் பிறகு மீண்டும் திருவாளர் வயிறார் ' ஏம்பா, பனிரெண்டரை மணிக்கு கொடுத்தாய். மூணரை மணி நேரம் ஆகிவிட்டது. கொஞ்சம் என்னை கவனிக்கக்கூடாதா" என்று கேட்கும்போது பாவமாக இருக்கும். சரி என்று சொல்லிவிட்டு கொஞ்சம் நொறுக்கு தீனி( அதிகமாக வீட்டில் செய்வது) அல்லது பழங்கள் , சில நேரங்களில் பிஸ்கட் இப்படி ஏதாவது கொஞ்சம் கொரிப்போம்.

பின்னர், வெளியே சென்று நாற்பது நிமிடங்கள் வேகமாக நடந்துவிட்டு வருவோம். உடனேயே ஆனந்தமாக குளித்துவிட்டு, அதே வேகத்தில் சூடாக இஞ்சி டீ (தேநீர் காப்பி போடுவது என்னுடைய அன்றாட வேலைகள்) குடிப்போம். இது எல்லாமே எனக்கு வேலைகள் தானே. அதன் பிறகு, மனைவி பக்தி இசையை கேட்பாள். நான் ஓரிரு வலைத்தளங்களில் சென்று கொஞ்சம் சினிமா பாடல்கள் பாடுவேன் (இளையராஜா காலம் வரை உள்ள பாடல்கள்தான்) . மனது இருப்பின், மாலையும் இருபது நிமிடங்கள் தியானம் செய்வேன் ( எண்ண அலைகளின் ஓட்டம்தான். கண்ணை மூடிக்கொண்டு அமர்ந்தவுடன், ஏதேதோ எண்ணங்கள் அலைபாயும். அத்துடன் அப்படியே உட்காரவேண்டும், அவ்வளவே). இடையில் செல்போன் என்னை கூப்பிட்டு " கொஞ்சம் கொஞ்சடா" என்றவுடன் சிறிது அதனுடன் விளையாடிவிட்டு , கொஞ்சம் அப்படியும் இப்படியும் பராக்கு பார்த்துக்கொண்டிருந்தால் எட்டு , எட்டேகால் ஆகியிருக்கும். வயிறு ரொம்ப கேக்காது . ஆனால் இந்த வாய் என்று ஒன்று இருக்கிறதே, ரொம்ப பொல்லாதது , " டேய் இரவுக்கு என்னடா பலகாரம்?" என்று கேட்டுவிட்டால் அதற்கு ஏதாவது போட்டுத்தான் ஆகவேண்டும். வாய்க்கு ஏதேனும் பலகாரம் (உப்புமா , தோசை , சேவை , எப்போவாவது சப்பாத்தி) போட்ட பின்னர் கொஞ்சம் படித்தல் , இன்னுமொரு முறை செல்போனை கொஞ்சுதல்.
இரவு ஒன்பது மணி அளவில் இருவரும் 15-20 நிமிடங்கள் அன்னநடை பழகுவோம். பிறகு யூ டியூபில் எதாவது நிகழ்ச்சியை ( பேச்சு, பாடல், எப்போவாவது திரைப்படம்) பார்த்து விட்டு, பத்தரை மணிக்குள் படுக்க சென்றுவிடுவோம். நான் கொஞ்சம் அப்பிடி இப்பிடி என்றுதான் தூங்க செல்வேன். மீண்டும் கொஞ்சம் புத்தகம் படிப்பேன். செல்போன் ஆழ்வார் கேட்டுக்கொண்டால், சில நேரம் பத்து மணிக்கு கூட அவருடன் கொஞ்சம் கொஞ்சுவேன். கொஞ்சல் அதிகமாக இருந்தால் சில நாட்களில் இரவு 11 மணி கூட ஆகிவிடும். அதன் பிறகு எல்லோரையும் போல நானும் உறங்க சென்றுவிடுவேன்.

சில சமயம், படுத்த உடனே தூக்கம் வராது. சில நாட்களில் இரண்டு மூன்று மணி தூக்கத்திற்கு பின் நேரம் கேட்ட நேரமான நடுநிசி 1.30 முதல் 3 மணிக்குள்ளும் முழிப்பு வந்துவிடும். இந்த நேரத்தில் தூக்கம் இல்லாமல் இருந்தால் அது மிகவும் கொடுமை தான். எனக்கு பல நாட்கள் இந்த அனுபவம் உண்டு. என் மனது மிகவும் சஞ்சலப்படுகின்ற குணத்தை கொண்டிருக்கிறது. நான் கொஞ்சம் அதிகமாகவே சிந்தனை செய்பவன் கூட. இதனால் தான் இப்படி நடுஇரவில் நான் விழிப்பதாய் மருத்துவர்கள் சொல்கின்றனர். அஜீரணம் இருப்பினும் தூக்கம் தடை படும் என்பதும் என் தூக்கத்தின் அவ்வப்போதைய தடைக்கு காரணம் என்று நான் நினைக்கிறன். ஏனெனில், மருத்துவரும் அப்படிதான் நினைக்கிறார். அலுவலகம் போல வெளியில் சென்று தினமும் எந்த வேலையும் செய்யாமல் இருந்தாலும், இதுபோல தடை பட்ட தூக்க முறைகள் அமையக்கூடும் என்பது எனது ஆயுர்வேத மருத்துவரின் கருத்து. அப்படி தடை படும்போது, சில சமயங்களில் புத்தகம் படிப்பேன், சில நேரம் செல்போனுடன் தனிமையில் கொஞ்சுவேன். "இரவில் தூக்கம் தடை பட்டால் புத்தகம் மட்டும் படியுங்கள். செல்போன் பார்த்தல் கண்களுக்கு வேலை, மனதிற்கும் நல்லதல்ல" என்று என் மனைவி அவ்வப்போது சொல்வதுண்டு. நல்ல வேலை , அவளுக்கு இந்தமாதிரி தூக்கத்தில் முழிக்கும் வியாதி எதுவும் கிடையாது.

சுமாராக தூங்கினால் , அடுத்த நாள் காலை சுமாராக எழமுடியும். ஓரளவுக்கு நன்றாக தூங்கினால் அடுத்த நாள் மிகவும் உற்சாகமாக இருக்கும். இரண்டும் இல்லை என்றால், முகம் அமாவாசை சந்திரன் போலத்தான் இருக்கும். ஏதோ சாமி, இதுவரையில் இப்படியாக என் மூன்று வருட பதவி ஓய்வு காலத்தை ஒட்டி வருகிறேன். நகைச்சுவை உணர்வுடன் இருப்பது, எழுதுவது, படிப்பது, கொஞ்சம் பாடுவது , வேக நடை பழகுவது போன்ற காரணங்களால், மொத்தத்தில் நான் நான்றாகவே இருக்கிறேன். சின்ன சின்ன வியாதிகள் வருவதும் போவதுமாக தான் இருக்கும். நான் என்னதான் இளமையாக இருக்கிறேன் என்று நினைத்துக்கொண்டாலும், உடலில் நிகழும் முதுமை அறிகுறிகள் இருக்கத்தான் செய்யும். வெளியே சென்றால் அநேகமாக எல்லா இடத்திற்கும் மனைவியுடன் தான் செல்வேன். நடை பழக, காய்கறி பழங்கள் மளிகை சாமான்கள் வாங்க, கோவில் மற்றும் வேறு இடங்களுக்கு செல்ல, இவை எல்லாவற்றிற்குமே மனைவியுடன் தான் செல்வேன். (இவருக்கு வேறு யாரும் இல்லை போலிருக்கிறது என்று நீங்கள் யூகம் செய்வது , சரிதான்).

என்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்கிறேன், பணம் பொருள் உதவி தந்து. உடம்பை அலட்டிக்கொள்ளும் காலம் இப்போது மிகவும் குறைந்துவிட்டது. ஓரிரண்டு நெருங்கிய நண்பர்கள், சில அண்டைவீட்டுகாரர்கள், பொதுவாக புன்னகையுடன், நகைச்சுவையுடன் பிறரிடம் பழகுவது, வாரத்தில் இரண்டு நாட்கள் வெளியில் சுற்றிவிட்டு, ஹோட்டலில் விதவிதமான உணவு வகைகளை ருசி பார்ப்பது , அனைவரும் நன்றாக இருக்கவேண்டும், அனைவரிடமும் அன்பு , அமைதி மற்றும் ஆனந்தம் எப்போதும் நிலைத்திருக்கவேண்டும் என்ற தினசரி பிரார்த்தனை, இது போல காரணங்களினால், நான் இவ்வுலகில் உள்ள அதிருஷ்டசாலிகளில் ஒருவன் என்று நிச்சயமாக நம்புகிறேன். நீங்களும் கூட இப்படி உங்களுக்கு பிடித்தமான முறையில் வாழ்க்கையில் மகிழ்ச்சி அடைய மனமார வாழ்த்துகிறேன்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (25-May-22, 11:26 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 36

சிறந்த கட்டுரைகள்

மேலே