அமைதியாய் நீ கண்ணுறங்கு

தாலாட்டு பாடத்தானே தாயானேன்
பூவாட்டம் உன்சிரிப்பை
காணத்தானே சேயானேன்...
ஆரிராரோ...ஆரிராரோ...
ஆரி...ஆரி...ஆரிராரோ...

மகளே நீ கண்ணுறங்கு - என்
மடிமீது வந்துறங்கு.
வாழும் நாட்கள் கொஞ்சமே
தலை சாய்த்து தானுறங்கு.

வல்லூறு அலைகின்ற உலகமிது - ஒரு
சொல்கூட உன்மீது விழுந்திடாது
போராடி...போராடி...ஜெயிக்கணுமே
உரமேற்ற இப்போதே கண்ணுறங்கு.

விழிக்கின்ற காலங்கள் தொடருமே
விழிப்போடு உலகைநீ வெல்லணுமே
களைப்போடு சிணுங்காமல் என்பாலுண்ட
களிப்போடு கண்ணே நீ கண்ணுறங்கு.

கண்ணீரில் என் வாழ்க்கை கரைந்ததுவே
தண்ணீரில் படகெனவே தத்தளித்ததுவே
செந்நீரில் சரித்திரத்தை படைத்திடவே
கண்மணியே இப்போதே நீ கண்ணுறங்கு.

பெண்ணாக பிறந்துவிட்டால் இப்புவியில்
கண்ணாக காத்திடுவார் அக்காலம்
புண்ணாகிப் போனதுவே இக்கலிகாலம்
கண்ணயர்ந்து தூங்கிடுவாய் செல்வமகளே

காதோரம் நான் சொன்ன கதைகளையெல்லாம் - உன்
மனதோரம் அத்தனையையும் விதைத்துவை
துயிலெழுந்து நீ வளர...உன்னோடு அதுவும் வளர
இப்போதே அயர்ந்து நீ கண்ணுறங்கு.

கனவுகள் ஆயிரம்தான் கண்டுவிடு - அதை
நனவாக்க நாளும் நீ துணிந்துவிடு.
அத்தனையும் கைகூட வலுவேண்டும்
ஓய்வாக இப்போதே நீ கண்ணுறங்கு.

உன் வாழ்க்கை உன் கையில் - நீ
நிற்கவேண்டும் உந்தன் காலில்
வெற்றிவாகை சூடிட வேண்டும்
என் செல்ல நிலவே கண்ணுறங்கு.

ஆடு புலி ஆட்டமெல்லாம்
ஆடிடுமே இவ்வுலகம் - அதில் நுழைந்து
தேடு உன் அடையாளத்தை
அதுவரை அமைதியாய் நீ கண்ணுறங்கு.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (23-May-22, 10:32 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 152

மேலே