போலி சாமியார்கள்

நான் பிறந்து வளர்ந்து படித்து முடித்து சென்னை. 35 வருடங்கள் பணி புரிந்தது, வடஇந்தியாவிலும் ஐராபாதிலும்.ஆனால், என் வாழ்நாளில் எஞ்சியுள்ள நாட்களை அமைதியுடன் மகிழ்ச்சியாக கழித்து வருவது, தமிழ்நாட்டின் மரியாதை தலைநகரமான கோயம்புத்தூரில். நான் இந்த இனிய நகரம் வந்து 100 நாட்களாகிவிட்டது. இந்த நாட்களில் நான் இந்த நகரின் மீது கொண்டுள்ள மதிப்பு மிகப்பும் பெரிது. காரணம் , பொதுவாக பொதுமக்கள் மரியாதையுடன் பழகுகிறார்கள்,இனிமையாக பேசுகிறார்கள். சொல்ல போனால், மற்றவர்களை விட, ஆர் எஸ் புறத்தில் உள்ள உழவர்சந்தையில், காய்கறி விற்பனை செய்பவர்கள் மிகவும் இனிமையாகவும் மரியாதையுடனும் பேசுகிறார்கள் என்பது நானும் என் மனைவியும் கண்கூடாக காணும் உண்மை.
இந்த 100 நாட்களில், கோவையில், அபூர்வமாக இரண்டு மூன்று சந்தர்பங்களில், பேச்சில் இனிமை , மரியாதை இன்றி உள்ள சில பேர்களை நான் சந்தித்திருக்கிறேன். அதில், ஒரு காவி உடை ஆசாமியும் அடங்குவார். இவர் இரண்டு மூன்று கோயில்களுக்கு உரிமையாளராக இருக்கும் ஒருவர். முதன் முறையாக, நானும் என் மனைவியும் இவரது ஒரு கோயிலுக்கு சென்றிருந்தோம். இறைவனை தரிசித்துவிட்டு, அருகே உட்கார இடம் ஏதும் இல்லையாதலால், அருகில் உள்ள ராமர், லக்ஷ்மணர் , சீதா மற்றும் ஹனுமார் விகிரஹங்கள் உள்ள சந்நிதி ஒன்றின் ஓரத்தில் அமர்ந்து, அங்கிருந்து தெரியும் வயல்வெளியின் இயற்கை அழகை ரசித்துக்கொண்டிருந்தோம். அப்போது, அருகில் உள்ள ஒரு இடத்திலிருந்து, காவியுடை அணிந்த ஒரு மனிதரும் அவருடன் இன்னொருவரும் எங்களை கடந்து செல்ல வந்துகொண்டிருந்தனர். அவர்களை கண்டவுடன் என் மனைவி எழுந்து நின்றாள். நான் அவளிடம் கேட்டேன் " எதற்கு எழுந்திருக்கவேண்டும்" என்று (அவர்கள் யாரென்று எங்களுக்கு தெரியாது). அதற்குள் அந்த காவியுடை அணிந்தவர் எங்கள் பக்கத்தில் வந்து " தரிசனம் முடிந்தபின் இடத்தை காலி செய்யாமல், அரட்டை என்ன வேண்டி இருக்கிறது என்று ஆரம்பித்து ஏதேதோ சொல்ல ஆரம்பித்தார். அந்த நேரத்தில் அந்த கோவிலில் எண்களிருவரை தவிர வேறு ஒரு பக்தரும் இல்லை. " அங்கே cc கேமெராவில் உங்களை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அவர் வந்தால் நான் எதற்கு எழுந்திருக்கவேண்டும் என்று நீங்கள் சொன்னதையும் நான் கேட்டேன்." நான் அதற்கு சொன்னேன் " மரியாதையை மனதளவில் தான் முக்கியம்". அவர் " இந்து தர்மத்தை பற்றி உங்களுக்கு ஒன்றுமே தெரியவில்லை.எப்படி வயதான பெரியவர்களிடம் நடந்து கொள்ள வேண்டும். இந்த ஆஞ்சநேயர் ஒவ்வொரு மனிதனின் மனதிலும் இருக்கிறார்" என்று குதர்க்கமாக சொல்லிவிட்டு, அருகில் ஒரு அம்மன் கோவில் இருக்கிறது, என்னுடன் வாருங்கள் என்று சொன்னதும் , நாங்களிருவரும் அவருடன் நடக்க தொடங்கினோம். அடுத்த இரண்டு நிமிடங்களில் அவருடைய வார்த்தைகளில் ஒரு கடுமை இருப்பதை நான் கவனித்தேன். நானும் அந்த நேரத்தில் (அதற்கு முந்தயதினம் சரியாக தூங்காததால், கொஞ்சம் கடுப்பில் இருந்தேன்). அம்மன் கோவிலின் வெளியில் வந்தவுடன் காவியுடை மனிதர் " இது என்னுடைய இடம். இந்த இடத்திற்குள் நீங்கள் வர அனுமதி இல்லை" என்று ஆங்கிலத்தில் சொன்னபோது , நான் அந்த செய்கையை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எனக்கு அப்போது வந்த ரோஷத்தினால் " உங்களை போன்றவர்கள் கட்டிய கோவிலில் உள்ள தெய்வத்திற்கு தெய்வத்தன்மை இருக்காது." என்று நானும் ஆங்கிலத்தில் பதிலளித்தபோது அந்த மனிதர் " நீங்கள் மிகவும் பாவத்தை சம்பாதித்துக்கொண்டுவிட்டீர்கள்"என்று கோபத்துடன் சொன்னபோது நான் " பாவம் இல்லை, மாறாக நான் அதிகம் புண்ணியத்தை தேடிக்கொண்டுவிட்டேன்" என்று சொல்லிவிட்டு, என் மனைவியுடன் திரும்பி வந்துவிட்டேன்.
காரில் ஏறி அமர்ந்தவுடன் என் மனைவி சொன்னது " இருவருடைய நடத்தையும் சரியில்லை" என்றபோது நான் " என் மேல் தவறு இருப்பதாய் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், இவ்வளவு கோயில்களுக்கு உரிமையாளராக இருக்கும் ஒருவர் , அதுவும் காவி உடை அணிந்து கொண்டு , தான் பக்கம் வந்தவுடன் , தன்னை பற்றி ஏதும் அறியாத ஒருவன் எழுந்து நின்று தனக்கு மரியாதை தரவில்லை என்கிற ஒரே காரணத்திற்காக, அகம்பாவமும் ஆணவமும் கொண்டு நடந்து கொண்டது எந்த வகையில் அவரது பக்தியையும் முதிர்ச்சியையும் களங்கப்படுத்துகிறது" என்று பதில் தந்தபோது " அதுவும் சரிதான். இதைப்பற்றி இனி பேசவேண்டாம் என்று அமைதியாக கூறினாள் என் மனைவி.


இதை படிக்கும் வாசகர்களை நான் பணிவுடன் கேட்டுக்கொள்வது " காவி உடை அணிந்தவரெல்லாம் உண்மையான தெய்வ பக்தர்களா? பணம் இருக்கிறது என்கிற ஒரே காரணத்தினால், எந்த ஒரு மனிதர் கோவில் சிலையை எழுப்பினாலும், அந்த கோவிலிலும் , அந்த சிலையிலும் தெய்வீகம் இருக்குமா? 'இது என்னுடைய இடம், இதற்கு நீ வரக்கூடாது என்று அதிகார கட்டளை இட்டு என்னை அவரது கோவிலிற்குள் செல்ல அனுமதி தராத , ஒரு மனிதனை நான் மதிக்கவேண்டுமா, இல்லை அவர் அமைத்த அந்த கோவிலை நான் மதித்து, அங்குள்ள தெய்வத்தைத்தான் வணங்கவேண்டுமா?". நகரிலிருந்து வெகு தொலைவில் , வேறு எந்த வசதிகளும் இல்லாத ஒரு கோவிலுக்கு ஒரு தம்பதிகள் செல்வது , அங்குள்ள கோவிலின் அமைதியான சூழ்நிலையில் இருந்துவிட்டு வரவேண்டும் என்ற ஒரு காரணத்தை விட வேறு என்னவாக இருக்கமுடியும்? நான்தான் அந்த காவி உடை அணிந்தவருடன் வாக்குவாதம் செய்தேன் என்று வைத்துக்கொண்டாலும், ஒரு பாவமும் அறியாத என் மனைவியையும் அவர் அம்மன் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை என்பதை என்னவென்று சொல்வது? நாம் எவ்வளவோ பொதுஇடங்களில் (பஸ் பேருந்து நிலையம், ரயில் நிலையம்) அமர்ந்து இருக்கும்போது , காவி உடை அணிந்தோ இல்லை சாதாரண உடை அணிந்தோ எவ்வளவோ வயதானவர்கள் நம்மை கடந்து செல்கின்றனர். அவர்கள் நம்மை விட வயதானவர்களாக இருந்தால், நாம் அந்த ஒவ்வொருவரையும் பார்த்தவுடன் எழுந்து நின்று மரியாதையை செலுத்துகிறோமா? நம் மனதுக்கு பிடித்த, நாம் அறிந்து மரியாதையை தரக்கூடிய மனிதருக்குத்தானே நாம் வணக்கத்தையும், மரியாதையையும் செலுத்துகிறோம்?

நான் கேள்விப்பட்டவரையில், பொதுவாக, காவி உடை அணிந்தவர்கள் உலகவிருப்பங்களிலிருந்து அதிகமாக விலகி இருப்பவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி இருக்கையில் இவர்களது மனம், ஆசை, கோபம் , அகங்காரம் போன்ற சாதாரண மக்களின் கோணங்களிலிருந்து வேறுபட்டதாகத்தானே இருக்கவேண்டும். தான் பக்கத்தில் நடந்து செல்லும்போது, அங்கிருப்பவர் எழுந்துநிற்கவில்லை என்ற காரணத்திற்காக, ஒருவரை இகழ்ந்து பேசி, அவரை எல்லோருக்கும் பொதுவான கோவில் தெய்வத்தை காணக்கூட அனுமதி கொடுக்காமல் இறுமாப்புடன் இருக்கும் ஒருவர், வெறும் ஒரு சாதாரண நபரின்றி வேறு யாராக இருக்கமுடியும்?
தொடக்கத்தில் நான் குறிப்பிட்டது கோயம்புத்தூர் நகரத்து மக்களின் , மற்றவர்களை மதிக்கும், மற்றவர்களுடன் இனிமையாக பேசும் குணத்தை பற்றி. ஆனால், இந்த ஊரிலும் சற்று வித்தியாசமான மனிதர்கள், அதுவும் பொதுமக்களின் கண்பார்வையில் இருக்கக்கூடிய, உயர்ந்த மனிதர்கள் என்று சொல்லப்படும் வரிசையில் இருப்பவர்கள் கூட, ஆர் எஸ் புரம் உழவர்சந்தை காய்கறி வியாபாரிகளிடம் ஒரு சில நல்ல விஷயங்களை கற்றுக்கொண்டு, அவர்களை மாற்றிக்கொண்டால்தான், அவர்கள் போர்த்தியுள்ள அந்தந்த பதவிக்கும் , உடைக்கும் உரிய மரியாதையை கிடைக்கும் என்பது என் தாழ்மையான கருத்து.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (1-Jun-22, 8:02 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : poli saamiyaargal
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே