எழுச்சியூட்டும் தமிழ்க் கவிதைகள் நூல் ஆசிரியர் கவிஞர் அ அழகையா நூல் விமர்சனம் கவிஞர் இராஇரவி
எழுச்சியூட்டும் தமிழ்க் கவிதைகள்!
நூல் ஆசிரியர் : கவிஞர் அ. அழகையா!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா.இரவி!
வெளியீடு : அருள்மொழிப் பிரசுரம், D1, ஸ்ரீவாரி ப்ளாட் 23/11, கவனாத் தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை – 600 015. பக்கங்கள் : 112, விலை : ரூ.80.
******
நூலாசிரியர் கவிஞர் அ. அழகையா அவர்கள், மாமதுரைக் கவிஞர் பேரவையில் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் பாடிய கவிதைகளையும் மற்ற கவிதைகளையும் தொகுத்து நூலாக்கி உள்ளார். இது இவரது இரண்டாவது கவிதை நூல். பெயருக்கு ஏற்றபடி எழுச்சியூட்டும் தமிழ்க் கவிதைகளாக உள்ளன. இன்றைய சமுதாயத்திற்கு விழிப்புணர்வு விதைக்கும்வண்ணம் தமிழ்ப்பற்று ஊட்டும் வண்ணம் சிறப்பான கவிதைகளை வடித்து உள்ளார். பாராட்டுகள்.75 தலைப்புகளில் கவிதைகள் உள்ளன.
பதச்சோறாக நூலிலிருந்து சில கவிதைகள் காண்போம்.
தமிழ் வாழ்க!
தமிழைக் காத்தலுக்கு அதை / நீ நேசி, பின் சுவாசி
அதுவே தக்க வழி / இல்லையேல் வரும் பழி / பிறமொழி
தெரிந்து / சிறப்பதென்பது பிழை / உள்ளமொழி தமிழ்மொழி
அதை நீ பயின்று அடைவாய் புகழ் ஒளி!
இப்படி மொழி, ஒளி என சொல் விளையாட்டு மூலம் கவிதைகள் வடித்து எதுகை, மோனை, இயைபு என அத்துணை நயத்துடன் சுயபட கவிதைகள் வடித்துள்ளார். உலகமொழி முதல்மொழி தமிழ்மொழியின் சிறப்பை பல்வேறு கவிதைகளின் மூலம் நன்கு உணர்த்தி உள்ளார்.
தமிழ்தாய் வாழியவே!
ஆற்றல் மொழி உன் மொழி / போற்றல் என்றும் உனக்கு
முதுமொழிக்கு நீ அன்னை / பிறமொழிகள் உன் கிள்ளை
தமிழ்த்தாய் வாழியவே என தமிழ்த்தாய் வாழ்த்தும் வடித்துள்ளார். தமிழின் சிறப்பை, உயர்வை, மேன்மையை, பண்பை நன்கு விளக்கி உள்ளார்.
தமிழ் எழுத்தால் முடியாதா?
உலகில் உதித்த முதல்மொழி நம் மொழி
முத்திரை பதித்த செம்மொழி தமிழ்மொழி
ஆரத்தை மறுப்பார் வேறெதை அனுமதிப்பார்
நல் இலக்கணம் கொண்ட மொழி
தொல் இலக்கியம் படைத்த மொழி
உத்தமர் காந்தி கற்ற மொழி
இதிலுண்டு தேர்ந்த எழுத்து
பின் எதற்கு சேர்ந்த பிற எழுத்து?
தேசப்பிதா காந்தியடிகள் விரும்பி கற்ற மொழி நம் தமிழ்மொழி. எழுத்துக்களின் சிறப்புள்ள தமிழ்மொழிக்கு வடமொழி எழுத்துக்கள் வேண்டவே வேண்டாம் என்று ஆணித்தரமாக அடித்தும் சொல்லி உள்ளார்.
தமிழை நேசி
தமிழெனும் அமிழ்தம் / தான் மகிழ்ந்துண்டு
தகைசால் வாழ்வு / வாழ்பவன் தமிழன்
ஏன் பிறமொழி? / மணக்குமோ அம்மொழி
தமிழ் படி அறம் தெரியும் / முதலில் படி முத்தாய் இனிக்கும்
உலகின் மூத்த மொழி, முதல் மொழி, முதல் மனிதன் பேசிய மொழி - தமிழ். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அன்றே சொன்ன முதல்மொழி தமிழ்மொழியை முதலில் விரும்பிப்படி. தாய்மொழியை நன்கு கற்றுவிட்டு பின்னர் பிறமொழியைப் படி. தமிழே கற்காமல் பிறமொழி படிப்பது முட்டாள்தனம் என்பதை பல்வேறு கவிதைகளில் நன்கு காட்டி உள்ளார். அழகையா நீங்கள் எழுதிய கவிதைகள் அனைத்தும் அழகய்யா? என்று சொல்லும் அளவிற்கு அழகான கவிதைகள் வடித்து, தமிழன்னைக்கு அணிகலன் பூட்டி உள்ளார். பாராட்டுகள்.
கல்வி கற்றல்
உலகில் கல்வி கற்று நிமிர்தல் /
எக்காலத்தும் உன்னைச் சீராக்கும்
சொன்னவன் பாரதிதாசன் / சுடர்மிகு அவன் ஒளி
உன்னுள் புகுந்தால் அறியாமை அகலும்
எவை உனை எதிர்த்து நிற்கும்?
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் வைர வரிகளை நினைவூட்டி,
படி படி கல்வியை நன்கு படி என வலியுறுத்தி கல்வியின் மேன்மையை விளக்கியது சிறப்பு.
பிள்ளைப் பருவம்
பிள்ளை அது அன்புக்கிள்ளை / சில சமயமது சள்ளை
அறியாப்பருவம் ஆனந்தமே / சிறிதாயிருக்கையில் சிறுமை
பெரிதானதும் தரும் தொல்லை /
உரித்தாய் உயர்வாய் வளர்ந்தால் தேவா
எளிமையாய் இருப்பினும் ஏற்றமாய் வளர்ந்திட்டால்
பலியேதும் வாரா பாங்கே கிட்டிடும்
இப்படி குழந்தைப்பருவம் சுகமானது, ஒரே ஒருமுறை வருவது, போனால் திரும்ப வராதது. குழந்தைப் பருவத்தின் சிறப்பை உணர்த்தி கவிதைகள் வடித்துள்ளார். மழலைப் பருவம் என்ற தலைப்பிலும் கவிதை உள்ளது.
பணம்!
பணமே நீ இல்லையென்றால் நான் பிணமே
தினமே அதைத்தேடி ஓடுதே மனமே
உழைத்து உன்னை அடைதல் நியாயம்
ஏய்த்து உன்னை அடைந்தால் வருவது பாவம்
சேர்த்து அது தருமே நல்ல சேதம்!
பணத்தின் தேவையைச் சொல்லி அதனை அறவழியில் ஈட்டுவது சிறப்பு. அறமற்ற வழியில் ஈட்டுதல் பாவம் என்றும், அப்பாவம் சேர்த்தால் வரும் பெரும் சேதம் என்று தீயோருக்கு எச்சரிக்கையும் விடுத்துள்ளது சிறப்பு.
நூலாசிரியர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் 35 ஆண்டுகள் பணிசெய்து 2011ல் ஓய்வு பெற்று தற்போது ஓய்வின்றி இலக்கியப்பணி செய்து வருபவர். மதுரையில் நடக்கும் இலக்கிய விழாக்களில் தவறாமல் பங்கெடுத்து வருபவர். தமிழின்பால் மட்டற்ற பற்று, பாசம் கொண்டவர்.
விலங்கு!
இலங்கு போற்றுவோம் அவை
துலங்கும் நிலை காண்போம்
உயிர் யார்க்கும் பொதுவே
நிலை கொண்டுள்ள மாந்தர் அறியனும் இதையே
உழவனுக்கு உயிர் நண்பன் எருது
விலங்குகளை ஆதரிக்காவிடில்
நீயும் ஒரு விலங்கு தான்!
அன்னை போல் தருமே பால் – அது பசு
பிள்ளை ஏன் இல்லை அதன் பால் அன்பு?
அண்ணல் விரும்பியது ஆட்டுப்பால்.
மனிதாபிமானம் தாண்டி விலங்காபிமானத்துடன் கவிதைகள் வடித்துள்ளார். அன்னையைப் போல பால் தரும் பசுவை மதி, விலங்குகளை நேசி என அறிவுறுத்தி விட்டு விலங்குகளை ஆதரிக்காவிட்டால் நீ மனிதனல்ல, விலங்கு என்று சாடி உள்ளார்.
தமிழ்!
தமிழ் போலிலை உலகில் ஒரு மொழி
புகழ் தரும் கலைகளே அதன் வெளி
ஆலவாய் மதுரையில் ஆர்த்த மொழி
அதைப் போற்றுவதல்லால் உனக்கேது தொழில்!
பிறமொழி எழுத்தெல்லாம் நமக்குப் பகை
சிலரது எழுத்தானதால் அதற்குச் சிறை
ஊத்தை மொழிகலை உதறித் தள்ளு
உண்மை மொழியாம் தமிழை உயர்த்தி நில்லு!
இப்படி பல்வேறு கவிதைகளில் ஒப்பற்ற தமிழ்மொழியை உயர்த்திப் பாடி உள்ளார். பிறமொழிச் சொற்களையும் எழுத்துக்களையும் தமிழ்மொழியில் சேர்ப்பது குற்றமெனச் சாடி உள்ளார். நூலாசிரியரின் தமிழ்மொழிப் பற்று போற்றுதலுக்குரியது. போற்றுவோம், பாராட்டுவோம், நூலாசிரியர் கவிஞர் அழகையா அவர்களை.