நிரையுளர் அல்லார் நிமிர்ந்து பெருகல் அதுவே சுரையாழ அம்மி மிதப்பு - பழமொழி நானூறு 125

நேரிசை வெண்பா

உரைசான்ற சான்றோர் ஒடுங்கி உறைய
நிரையுளர் அல்லார் நிமிர்ந்து - பெருகல்
வரைதாழ் இலங்கருவி வெற்ப! அதுவே
சுரையாழ அம்மி மிதப்பு. 125

- பழமொழி நானூறு

பொருளுரை:

மலையினின்றும் விழுகின்ற ஒளிவிளங்கும் அருவியை உடைய மலை நாடனே!

புகழ் நிறைந்த குடியிற் பிறந்த அறிவு நிறைந்தவர்கள் வறுமையால் வருந்தி நிற்க, நல்ல குடிமரபின் வரிசையில் சேராதவரான கீழோர் செல்வத்தால் தலைநிமிர்ந்து பெருகுதல் ஆகிய அது நீரிலே சுரை ஆழ்வதையும் அம்மி மிதப்பதையும் ஒக்கும்.


கருத்து:

நற்குடிப் பிறவார் செல்வத்தால் தருக்கி நிற்பர்.

விளக்கம்: ஆழவேண்டியது மிதந்தும், மிதக்கவேண்டியது ஆழ்ந்தும் இருத்தல் போல, செல்வம் பெற வேண்டியவர் வறுமையுற்றும் வறுமையடைய வேண்டியவர் செல்வம் பெற்றும் இருப்பர்; சுரை ஆழ்தலும் அம்மி மிதத்தலும் இயற்கையில் பொருந்தாதவாறு போல, சான்றோர் வருந்தி நிற்கக் கீழோர் பெருகி நிற்றல் பொருந்தாததொன்றாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (10-Jun-22, 6:21 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 42

மேலே