யாரோ

யாரோ?
=======
அரிசியின் விலையோ இனிமேல்
ஆயிரம் தாண்டு மென்றும்
எரிவா யுவிலையோ இன்னமும்
ஏறியே செல்லு மென்றும்
எரிபொருள் நிலையோ மேலும்
ஏய்த்திடக் கூடு மென்றும்
வரிசையாய் பீதி யூட்டி
வாழ்க்கையை வதைக்கின் றாரே!
**
பொருட்களின் தட்டுப் பாட்டால்
புசித்திட நேரா தென்றும்
இருட்டினில் கிடப்ப தற்கு
இரவிலும் மின்வெட் டென்றும்
திருடரின் வருகை மேலும்
தெருவெலாம் கூடு மென்றும்
வருத்திடப் பீதி யூட்டி
வாழ்க்கையை வதைக்கின் றாரே!
**
நடுத்தர மக்கள் வாழ்வும்
நடுத்தெரு நிற்கு மென்றும்
எடுத்தொரு கடவுச் சீட்டு
ஏறிடு வெளிநா டென்றும்
கொடுத்திடும் அரசா லோசனை
கொண்டுவா டொலரென் கிறதே
வடுக்களாய் போன வாழ்வை
வாட்டியே வதைக்கின் றாரே!
*
எல்லாம் இருந்த நாடு
எதுவுமே இல்லா நாடாய்
அல்லலில் மூழ்கு தற்கு
ஆண்டவன் பிழைசெய் தானே!
பொல்லா வறுமை சூழ்ந்தும்
பொறுமையாய் வாழும் மக்கள்
இல்லா தேங்கிடும் நிலையை
இல்லா தாக்குவ தாரோ?
*
#மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (17-Jun-22, 2:24 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : yaro
பார்வை : 98

மேலே