எங்கு போனாய் நண்பா

எங்கு போனாய் நண்பா !

நான் யார் ? இந்த எண்ணத்துடன் தமிழ்நாட்டின் மேற்கு மலை தொடரின் அடிவாரத்தில் ஐம்பது அறுபது குடிசை வீடுகளே காணப்படும் இந்த ஊரின் அருகே ஆற்றங்கரையோரம் அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் அழகை இரசித்தபடி அமர்ந்திருக்கிறேன்.
இந்த அமைதியான சூழலில் எப்பொழுதுமே உட்கார்ந்து இயற்கையை இரசிப்பது எனக்கு பிடிக்கும்.
ஆனால் இந்த நதி ! பார்க்க அமைதியாய் இருந்தாலும் குணம் மிக மோசமானதுதான் என்னை பொறுத்தவரை. ஒவ்வொரு முறையும் நான் நாற்பது வருடங்களுக்கு முன்னால் கண்ட இந்த நதியின் ஆக்ரோசத்தை காண்பதற்காகவே அடிக்கடி வந்து, வந்து சென்று கொண்டிருக்கிறேன்.
சிறு வயதில் அதாவது பதினேழு வயதிலிருந்து இருபது வயது வரை எனக்கு இந்த ஊரின் மரம் செடி கொடி, ஓடிக்கொண்டிருக்கும் ஆறு, பச்சை பசேல் என்று விரிந்திருந்த வயல் வெளிகள் அனைத்தும் எனக்குத்தான் சொந்தம் என்று நினைத்து படுத்து உருண்டு ஓடி ஆடி விளையாண்டு அனுபவித்த ஊர். இருந்தாலும் நாற்பது வருட ஓட்டங்களில் இது இப்பொழுது என்னை மறந்து விட்ட ஊர். என்னை யாரென்றே தெரியாத ஊரில் இருப்பதாக நினைக்கிறேன்.
அப்படியே என்னை தெரிந்தவர்கள் இந்த ஊரில் இருந்தாலும் இப்பொழுது என்னை பார்த்தால் சத்தியமாக அடையாளம் கண்டு பிடிக்க முடியாது என்பதால் நான் வீசிக்கொண்டிருந்த தென்றல் காற்றை அனுபவித்தபடி நதியின் அழகை இரசித்து கொண்டிருந்தேன். மாலை மங்கி இருள் என்னை சூழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை அறியாமல்.
நாற்பது வருடங்கள் ஓடிவிட்டாலும் திடீரென்று நினைத்த போது நான் இங்கு வரவேண்டிய அவசியமென்ன ? அதுவும் வயது அறுபதை தாண்டி இன்னும் ஓய்வே பெற முடியாமல் சென்னையில் பிரபல இசையமைப்பாளராக கோலோச்சி கொண்டிருக்கும் என்னை ‘நேற்று இரவு’ என்னை இந்த ஊருக்கு வர சொல்லி கனவில் வந்து சொன்னான் பால்ய சினேகிதன் ரெங்கன், அதையும் நம்பி உடனே இங்கு நான் மட்டுமே எந்த துணையில்லாமல் தனியாக ஓட்டுநரை மட்டும் வைத்து இரவு பக்கத்தில் இருக்கும் நகரத்தில் வந்து தங்கியிருக்கிறேன். இப்படி அடிக்கடி நான் வருவதால் நான் தங்குவதற்கு பிரத்யேகமாகவே ஒரு அறையை வைத்திருப்பார் இந்த ஹோட்டலின் அதிபர்.
ரெங்கன் நினைவில் இருக்கும்போது அவனது முகம் தெளிவாக ஞாபகம் வரவில்லை, ஆனால் கனவில் அவனது முகம் தெளிவாக இருந்தது. என்னை ஏன் இங்கு வர சொன்னான், ஒவ்வொரு முறையும் கனவில் வந்து சொல்லி கொண்டு போவான், அதையும் சிரமேற்று நானும் கிளம்பி வந்துவிடுகிறேன். என்றாலும் ஒவ்வொரு முறையும் புரியாமல் மனதுக்குள் ஒரு வித பரபரப்புடன் தான் இருந்தேன், ஏன் பய உணர்ச்சி கூட இருந்தது.
இப்படி ஆற்றோரத்தில் பைத்தியக்காரனாய் உட்கார்ந்திருக்கிறேனே, கனவில் நண்பன் வந்து இங்கு வர சொன்னதை கேட்டு, வருடத்திற்கு நான்கைந்து முறை இப்படி வருவது பணியின் சிக்கலில் முடியாததாக இருந்தாலும், இங்கு வந்து இந்த ஆற்றங்கரையோரம் அமர்ந்திருப்பதால் என் உடலுக்கு ஒவ்வாததாய் இருந்தாலும், இங்கு வந்தவுடன் அந்த காற்றும் நதியின் அழகும் என்னை இரசிக்கத்தான் வைத்து கொண்டிருந்தது.
மூன்று வருடங்கள்தான் எங்களது பழக்கம், ரெங்கன் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவன், அவன் அப்பா ஒரு விவசாயி, நானோ காட்டிலாகா அதிகாரியின் மகன், அப்பாவின் பணி நிமித்தமாய் இந்த மலையோரத்தில் அரசு குடியிருப்பில் வசிக்கிறோம்.
இருவரும் ஒரே இடத்திலிருந்து பக்கத்தில் இருக்கும் நகரத்திற்கு பள்ளிக்கு சென்று கொண்டிருந்தோம். நட்பு மெல்ல மெல்ல துளிர் விட்டு ஆறு மாதத்திற்குள் இறுகிய நட்பாகி விட்டது
மூன்று வருடங்கள் அவனுடன் சுற்றித்திரியாத இடங்களே இல்லை, காடு, மேடு மலை அத்தனையும் சுற்றினோம், எல்லாம் அப்பாவின் பணி மாறுதல் வரும் வரைதான்.
நாளை காலை அப்பா அம்மாவுடன் அப்பாவுக்கு மாற்றலான ஊருக்கு கிளம்ப வேண்டும். மாலை நான்கு மணி இருக்கலாம், ரெங்கன் என்னை பார்க்க வந்திருந்தான். அவன் முகம் களை இழந்திருந்தது. நண்பனை விட்டு பிரியப்போகிறான். எனக்கும் மனதுக்குள் அதே சோகம் இருந்தது. வாடா வீட்டுக்குள் அழைத்தேன்.
இல்லை வா அப்படியே ஆற்றோரமாய் ஒரு ரவுண்டு போயிட்டு வரலாம், எனக்கும் ஆசைதான். இனி இந்த காடு மலை, வயல் எல்லாம் எப்பொழுது பார்க்க போகிறோம்? நண்பனுடன் கிளம்பி விட்டேன்.
இருவரும் கரையோரமாகவே மெளனமாய் நடந்தோம். எதுவும் பேச மனம் வரவில்லை. எங்கள் கூட்டணியால் மூன்று வருடங்கள் கடந்ததே தெரியாமல் இருந்தவர்களுக்கு திடீரென்று என்னுடைய “பிரிவு” நண்பனுக்கு எவ்வளவு வேதனையை
கொடுத்திருக்கும் என்பது, அப்பொழுது இலேசாக தெரிந்திருந்தாலும் இதோ நாற்பது வருடங்களாக அடிக்கடி வந்து கொண்டிருக்கும் எனக்கு இப்பொழுது நன்றாக விளங்கியிருக்கிறது.
நதி அமைதியாக ஓடி கொண்டிருக்கிறது, மெல்ல அதன்புறம் பார்வையை திருப்பியவனுக்கு கரையோரமாகவே மிதந்து வந்து கொண்டிருந்த பழுத்த மாம்பழம் ஒன்று கண்னை கவர்ந்தது. ஆற்று மேட்டு கரையிலிருந்து மெல்ல மண்ணில் சறுக்கியபடி கீழே இறங்கியவன் அடித்து வரும் அந்த பழத்தை மறிக்க தயாராய் நின்றேன்.
அந்த பழம் அதுவரை கரை ஓரமாகவே வந்தது சட்டென கொஞ்சம் தள்ளி உள்புறமாக நகர்ந்து சென்றது. அதை எப்படியும் பிடிப்பது என்று முடிவெடுத்தவன் லுங்கியை மடித்து விட்டு தண்ணீருக்குள் கால் வைத்து ஆற்றில் கொஞ்சம் உள்புறமாக
நகர்ந்தேன்.
பழம் என்னருகில் வந்து இன்னும் சற்று விலகி போக ஆரம்பிக்க சட்டென தண்ணீருக்குள் படுத்து அப்படியே பழத்தை பிடித்து விட்டேன். வெற்றியுடன் உடலை திருப்பி கரைக்கு வர முயற்சிக்க..தண்ணீரின் இழுவை அதிகமாக தெரிந்தது.
அதுவரை கரையோரமாய் என்னுடைய செய்கைகளை வேடிக்கையாய் பார்த்து கொண்டிருந்த ரெங்கன் திடீரென்று கரையிலிருந்து கீழே குதித்து டேய் கையை கொடு சீக்கிரம் “டேம்ல” தண்ணிய திறந்து விட்டுட்டாங்க பின்னாடி பாரு பெரிய அலையாட்டம் வருது அவன் என்னை நோக்கி கையை நீட்டியபடி வர தண்ணீர் இழுவை என்னை அப்படியே தள்ளிக்கொண்டே செல்கிறது. நான் இதே ஆற்றில் நீச்சல் அடித்து குளித்தவன், ஆனால் என்னை தண்ணீர் உள்புறமாக தள்ள தள்ள, கரை ஒரமாக ஒதுங்க சிரமப்பட்டேன். அதற்குள் நண்பன் இருக்குமிடத்தை விட்டு கொஞ்ச தூரம் வந்திருந்தேன்.
திரும்பி பார்க்க தண்ணீர் உயரம் மட்டும்தான் கண்ணுக்கு தெரிய நண்பனெங்கே?
சமாளித்து நீச்சல் அடித்து பார்த்தேன், சட்டென யாரோ என் பின்புற தலையை பிடித்தது தெரிய என்னை அப்படியே கரையோரமாய் இழுத்து செல்வதை உணர முடிந்தது. கரையின் அருகில் நீட்டிக்கொண்டிருந்த மரக்கிளையை சட்டென பிடித்து நின்றவன் சமாளித்து என்னை காப்பாற்றி கொண்டு வந்தவனையும் பிடித்து இழுக்க ஒரு கையை பின்புறமாக கொண்டு சென்று அவனையும் பிடித்தேன். ஆனால் பிடி நழுவ..தண்ணீரின் வேகமோ அதிகமாக இருந்தது. பிடித்திருந்த ஒரு கைபிடியும் நழுவுவது போல உணர சட்டென திரும்பி இரு கைகளாலும் மரக்கிளையை பிடித்து அப்படிய மரக்கிளையில் உடலை சாய்த்து மெல்ல நகர்த்தி மேலே வந்தேன்.
எங்கும் இருள் சூழ்ந்து விட்டது. தண்ணீரின் சத்தம் மட்டும்.. ரெங்கன் எங்கே? எங்கே என்று தேட அதற்கு மேல் போக முடியாமல் அப்படியே கரையிலேயே குப்புற படுத்து விட்டேன்.
கண் விழிக்கும்போது மருத்துவமனையில் இருந்தேன். கிட்டத்தட்ட இரண்டு நாட்களாய் மயக்கமாய் கிடந்ததாக சொன்னார்கள். ரெங்கன் என்னவானான்? இந்த கேள்விக்கு இதுவரை இதோ நாற்பது வருடங்களாக விடை தெரியாமல் கனவில் வரும்போதெல்லாம் வந்து வந்து இந்த கரையோரமாய் தேடிக்கொண்டிருக்கிறேன்.
ஐயா.. சட்டென அழைக்கும் குரல் கேட்டு திரும்பி பார்க்க கார் ஓட்டுநர் நின்று கொண்டிருந்தது இருளில் தெரிந்தது. ரொம்ப இருட்டிடுச்சு, மணி எட்டு மணிக்கு மேல ஆயிடுச்சு..மெல்ல சொன்னார். என் துக்கம் தெரிந்து என்னுடன் நீண்ட வருடங்களாக இருப்பவர்.
டயமாயிடுச்சா..போலாமா கண்களை துடைத்து எழுவதற்கு முயற்சித்தவுடன் ஓட்டுநர் மெல்ல என்னருகில் வந்து என்னை தோளில் சாய்த்தபடி அப்படியே காருக்கு கொண்டு சென்றார்.
என் வாழ்க்கை முடியும் வரை நண்பன் ரெங்கனை இப்படி அடிக்கடி தேடி வர அனுமதி கொடு இறைவா என்று மனதுக்குள் வேண்டி கொண்டு நகரத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன்.

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (22-Jun-22, 10:23 am)
பார்வை : 540

மேலே