உங்களுக்காக ஒரு கடிதம் 25
ஹாய்ய்ய்...
எப்படி இருக்கிறீர்கள்? உங்களின் கஷ்டங்கள்...உங்கள் எதிர்பார்ப்புகள்...உங்களின் சவால்கள் எல்லாம் உங்கள் குரல் என் வரிகளில் படித்து வியப்புற்றேன். இப்படியும் இருக்குமா? என்றெண்ணும்போது...புதிய கோணத்தில் உங்களின் குறைகளை படிக்கும்போது தவறுகள் எங்கள்மீதும் இருப்பது தெரிகிறது. என் வயதுக்கேற்ப இனி பெற்றோரின் நிலையிலிருந்து பேசப்போகிறேன்... சாரி எழுதப்போகிறேன். எங்களையும் புரிந்து கொள்ளுங்கள்.
முதலில் நான் சொல்லப்போவது என்னவென்றால் நீங்கள் எல்லோரும் எங்களின் ரத்தத்தின் ரத்தம். எங்களின் உயிர்த் துடிப்பு. நீங்கள் நக்கலாக சிரிப்பதும்....என்ன தக்காளி சட்னியா? என்று கிண்டல் அடிப்பதும் தெரிகிறது. எது எப்படி ஆனாலும் உண்மைக்கு என்றும் அழிவில்லை. நாங்கள் உழைப்பதும்...உயிர் வாழ்வதும் உங்களுக்காகத்தான். நீங்கள் கருவில் உருவானதிலிருந்து...மண்ணில் கால்பதித்தது முதல்...உங்களை சுற்றியே எங்களின் உலகம்..சுற்றத்தொடங்கிவிட்டது. அதன்பின் எங்களின் ஒவ்வொரு கனவும்...ஒவ்வொரு செயலும் உங்கள் வாழ்க்கையோடு...உங்கள் எதிர்காலத்தோடு பின்னிப்பிணைந்த கொடிபோல படரத் தொடங்கிவிட்டது. நாங்கள் பட்ட கஷ்டங்கள் நீங்கள் முடிந்தவரை படக்கூடாது என்கின்ற பதட்டத்தில் சில தவறுகள் ...தவறு என்று கூட சொல்லமாட்டேன். சில சறுக்கல்கள் என்று வேண்டுமானால் சொல்லிக்கொள்ளலாம்....செய்திருக்கலாம். இல்லையென்றால் உங்கள்மேல் இருக்கும் கண்மூடித்தனமான பாசம்... உரிமையினால்...எதிர்பார்ப்பினால் வந்த குளறுபடிகளாய் இருக்கலாம்.
முதல் குற்றமாய் நீங்கள் கூறியது...எங்களின் கனவுகளையையும்..இயலாமையையும் உங்கள்மீது திணிக்கிறோம் என்று. உண்மைதான்.அது திணிப்பது இல்லை. எங்கள் வாழ்க்கையைவிட உங்கள் வாழ்க்கை பிரகாசமாய் ஒளிவிட வேண்டும் என்கின்ற ஆசைதான். நாங்களும் உங்கள் வயதை கடந்துதான் வந்திருக்கிறோம். அன்று இருந்த எங்கள் வசதிக்கேற்ப...நாங்களும் குறும்புகளும்...தில்லு முல்லுகளும் செய்துதான் இருக்கிறோம். இல்லையென்று சொல்லவில்லை. நாங்களும் பெரியவர்கள் சொன்ன வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்தோமென்றால் குறைவுதான். ஆனால்
அப்படி செய்தவர்களின் சதவிகிதம் மிக மிக குறைவு. ஆனால் பெரியவர்கள் மேல் எங்களுக்கு இருந்த மதிப்பும், பயமும்,மரியாதையும் துளிகூட குறைந்ததில்லை. இன்றோ எங்களின் மரியாதை எவ்வளவு தூரம் இருக்கிறது என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.ஒரேயடியாய் மரியாதையே இல்லை என்று சொல்ல முடியாது.அது எங்களுக்கே தெரியும். அந்த சதவிகிதம்தான் கூடிக்கொண்டே போகிறது. அதுதான் எங்கள் கவலையே. நாங்கள் சொல்வதெல்லாம்..சரிதானா? இல்லை சரியில்லையா? குழப்பம்தான் மிஞ்சுகிறது. நான் கிறுக்கிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. கவிதையின் தலைப்பு " எதார்த்தம் "...கவிதை இப்படி போகிறது
நெருப்பு - உண்மை,சத்தியம்.
சுடும் - ஞானம்,அறிவு.
தொடாதே - வேதனை, அனுபவம்
தொடுவேன் - இளமை, திமிர்.
இதை எத்தனை தூரம் நீங்கள் புரிந்து கொள்வீர்களோ இல்லை புரிந்துகொண்டீர்களோ எனக்கு தெரியாது. அதே இளமையை நாங்களும் தாண்டித்தான் வந்திருக்கிறோம். நாங்களும் தொட்டு சூடு வாங்கியதால்தான் இதோ எழுதிக்கொண்டிருக்கிறோம்.
அந்த சூடு உங்களை சுட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான், இந்த பதற்றம்...இந்த பரிதவிப்பு. நாங்கள் இளமையில் இருந்த காலத்தில் எங்களுக்கான சவால்கள் கொஞ்சம்தான். ஆனால் உங்களை எதிர் நோக்கி இருக்கும் சவால்கள் அதிகம்தான். ஒப்புக்கொள்கிறோம். உங்கள் வயதில் நாங்கள் செய்த அலப்பறைகளால்தான் இன்றைய நிலையில்...எங்களின் நிலைமை உங்களுக்கே நன்றாகத் தெரியும். ஆனால் ஒன்றுமட்டும் எனக்கு உரைக்கிறது. நாங்கள் சரியில்லையோ? இல்லை எங்களின் அணுகுமுறை சரியில்லையோ? புரியவில்லை.
தொடரும்.