மதில்கள்

மதில்களைத் தாண்டிய
கிளைகளை நறுக்கிவைத்தோம்
வேர்களின் நட்பை என்ன செய்வோம்?
*
மதில்களைக் கொண்டு
நம் வீட்டுக் குழந்தைகள்
கூடி விளையாடுவதற்குத்
தடைபோட்டோம்
மதில்களுக்கு மேலே
விளையாடி மகிழும்
தென்றலை எப்படித் தடுப்போம்
*
உன் வீட்டையும்
என் வீட்டையும் பிரிக்கும் முகமாக
எழுப்பிக் கொண்ட
மதில்களின் மேல்தான்
நம்வீட்டுப் பூனைகள் குடும்பம்
நடத்துகின்றன
*
குளிக்காத போதும்
அழகு சாதன திரவியங்களால்
பேரழகியாகவிடும் நம்
நாகரீகப் பெண்களைப்போல்
வீடு குப்பை மேடாக இருக்கின்றபோதும்
நாலுபேர் மதிக்க வேண்டும் என்பதற்காக
மதில்களை அழகாக்கி வைக்கிறோம்
*
மதில்களில் விளம்பரம்
ஒட்டக் கூடாதென
விளம்பரப் படுத்துவோம்
*
மதில்களுக்குள் மாட்டிக்கொண்டு
எப்போதும் குரைத்துக் கொள்ளும்
நம் வீட்டு நாய்கள்
உன்னையும் என்னையும் தமது
கெட்டவார்த்தைகளால் திட்டுவதாகக் கூட இருக்கலாம்
*
குடிசைகள் நிறைந்த நாட்டுக்குள்
வாழும் நாமே
ஒரு வீட்டைக் கட்டக்கூடிய
பணத்தில் மதில்களைக் கட்டிவைத்துப் பிரிந்து கிடக்கிறோம்
*
மதில்களால் மதிக்கத்தக்கவராய்
இருக்கவேண்டி ஆசைப்பட்டு
வீட்டுக்குள் மனைவியே
மதிக்காதவராய் வாழும் நாம்
மதிலில்லாக் குடிசைக்காரனின்
மகிழ்ச்சியைக்கூட பெறமுடியாதவராகிக் கிடக்கறோம்.
*
மதில்கள் என்று நாம்
எழுப்பிக் கொண்டதெல்லாம்
உன் மனசுக்கும்
என் மனசுக்கும்
நடுவே கிடக்கும் பிரிவினைகளை
வெளியே காட்டிவைக்க ஒரு
அடையாளச் சின்னம் அவ்வளவே!
*
மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (29-Jun-22, 2:22 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 59

மேலே