திருவதிகை வீரட்டானம் - பாடல் 8

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).

பாடல் எண்: 8 - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

ஆடல் புரிந்த நிலையும்
..அரையி லசைத்த அரவும்
பாடல் பயின்றபல் பூதம்
..பல்லா யிரங்கொள் கருவி
நாடற் கரியதொர் கூத்தும்
..நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து
ஓடுங் கெடிலப் புனலும்
..உடையார் ஒருவர் தமர்நாம் 8

அஞ்சுவதி யாதொன்று மில்லை
..அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை:

கூத்தாடுதலை விரும்பிச் செய்த நிலையும், இடுப்பில் இறுக்கிக் கட்டிய பாம்பும், இசைக் கருவிகளைக் கைகளில் கொண்டு பல ஆயிரக்கணக்கில் சூழ்ந்த பாடல்களில் பழகிய பூதங்கள் பலவும், ஆராய்ந்து அறியமுடியாத கூத்தும், மிக உயர்ந்த வீரட்டக் கோயிலை ஒரு பக்கத்தில் சுற்றி ஓடும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டானருடைய அடியாரும், உறவினருமாம் நாங்கள்.

ஆதலின் எங்களுக்கு அஞ்சுவதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனி அஞ்சுவதற்குரிய எதுவும் வரப்போவதும் இல்லை.

குறிப்புரை:

ஆடல் புரிந்த நிலை - திருக்கூத்தாடிய நிலை, அரை - (நடு) இடை, அரவு – பாம்பு,

நாடற்கு அரியது ஓர் கூத்தும் - அரங்கிடை நூலறிவாளர் அறியப்படாத தோர் கூத்தும்
அக்கூத்தினை நாடற்குப் பல்லாயிரங் கருவி இருப்பினும் அக்கூத்து நாடற்கரியதே.

கோயிலைக் கண்டோர் வீரட்டத்தின் நன்குயர்வை அறிவர்.

ஓடும் கெடிலப் புனல் - வீரட்டத்தைச் சூழ்ந்து ஓடும் புனல்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (1-Jul-22, 8:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 14

மேலே