திருவதிகை வீரட்டானம் - பாடல் 9

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர் தேவாரம் - திருவதிகை வீரட்டானம்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன்கோவில் ஆகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று.

அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).

பாடல் எண்: 9 - அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

சூழும் அரவத் துகிலுந்
..துகில்கிழி கோவணக் கீளும்
யாழின் மொழியவ ளஞ்ச
..அஞ்சா தருவரை போன்ற
வேழ முரித்த நிலையும்
..விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து
தாழுங் கெடிலப் புனலும்
..உடையார் ஒருவர் தமர்நாம்

அஞ்சுவதி யாதொன்று மில்லை
..அஞ்ச வருவது மில்லை.

பொழிப்புரை:

பாம்பினால் சுற்றப்பட்ட ஆடையும், துணியிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட அரைஞாணோடு கூடிய கோவணமும், யாழ் ஒலி போன்ற இனிய குரலை உடைய பார்வதி அஞ்சுமாறு அச்சமின்றிப் பெரிய மலை போன்று வந்த வேழத்தின் தோலை உரித்த காட்சியும்,

சோலைகள் மிகுந்த வீரட்டத்தை ஒருபுறம் சுற்றிப் பள்ளத்தில் பாயும் கெடில நதித்தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டானருடைய அடியாரும், உறவினருமாம் நாங்கள்.

ஆதலின் எங்களுக்கு அஞ்சுவதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனி அஞ்சுவதற்குரிய எதுவும் வரப்போவதும் இல்லை.

குறிப்புரை:

அரவத்துகில் - பாம்பினால் சுற்றப்பட்ட ஆடை, துகில்கிழி - கோவணக்கீள்; கிழிப்பது கிழி. கீழ் - கீள், மரூஉ.

குபினம் – அழுக்கு, குபின சம்பந்தம் கௌபீனம், கோவணம் மரூஉ.

யாழின் மொழியவள் - யாழொலி போலும் இனிய மொழியையுடைய உமையம்மையார்,

வேழம் உரித்தவர் அஞ்சிலர், உரிக்கும் பொழுது அங்கு இருந்தவர் அஞ்சினார்,

அஞ்சாமைச் சிறப்புணர்த்த அருவரை போன்ற வேழம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Jul-22, 8:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 17

சிறந்த கட்டுரைகள்

மேலே