நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே பூவின் கிழத்தி புலந்து – நாலடியார் 252

நேரிசை வெண்பா

பல்லான்ற கேள்விப் பயனுணர்வார் பாடழிந்து
அல்லல் உழப்ப(து) அறிதிரேல் - தொல்சிறப்பின்
நாவின் கிழத்தி யுறைதலாற் சேராளே,
பூவின் கிழத்தி புலந்து 252

- அறிவின்மை, நாலடியார்

பொருளுரை:

பல நிறைந்த கேள்விகளால் உண்டாகும் பயனைத் தமது பழக்கத்தில் நுகர்ந்து இன்புற்று வரும் அறிஞர்கள், ஒருவேளை உலகில் தம் பெருமை அழிந்து வருந்துவதற்குக் காரணம் நீவிர் தகுதியாக அறிவீராயின், அது பழைமையாகத் தொடர்புற்று வருஞ்சிறப்பினை யுடைய நாமகள் வாழ்ந்து வருவதால் பூமகள் ஊடல் கொண்டு அவர்களிடம் சேரமாட்டாள் என்பதேயாம்.

கருத்து:

கல்வி கேள்விகளிற் பழகிவரும் உள்ளம் பொருள் நினைவுகள் படிதற்கு இடம் பெறாமையின், ஒருவேளை அவ்வுள்ளமுடையோர் வறியராயிருப்பது இயல்பு.

விளக்கம்:

‘கேள்விப் பயன்' என்றார். செல்வத்தில் அத்தகைய பயனில்லாமையின், அறிவு உயிரைப் பற்றித் தொடர்ந்து வருதலின், நாமகட்குத் தொன்மை கூறப்பட்டது;

கல்வி கேள்விகளில் விரைந்தோடும் நினைவு செல்வத்திற் செல்லாமையின், ‘சேராளே பூவின் கிழத்தியென்றார்;

இமயமலையில் மரகதப்பாறையில் பதுமை என்னுங் கயத்திற் பொற்றாமரையில் திருமகள் சிறப்பின் உறைவள் என்பது, ‘அருமணி மரகதத் தங்கண் நாறிய எரிநிறப்பொன்னிதழ் ஏந்து தாமரைத் திருமகள்'1என்னுஞ் சிந்தாமணியினாலும் அதனுரையினாலும் அறியப்படுதலின் திரு பூவின் கிழத்தியாதல் பெறப்படும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Jul-22, 9:05 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே