இன்னும் எத்தனை காலத்துக்கு மதுரை இப்படி இருக்கணும்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்படங்கள் வெளிவருவது வழக்கம். அப்படி இரண்டு தினங்களுக்கு முன் வந்த திரைப்படம் நதி. இயக்குனர் தாமரை செல்வன் இயக்கத்தில் கயல் ஆனந்தி, இயக்குனர் கரு.பழனியப்பன், வேல.ராமமூர்த்தி, முனிஸ்காந்த் , youtube பிரபலம் மைக்செட் ஸ்ரீராம் என பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து திரை விமர்சனம் எழுதுவது இந்த பதிவின் நோக்கம்.
இந்த படத்தின் கதை மதுரையை மையமாக நகர்கிறது. அரசியல், சாதி என 2004 ல் வெளிவந்த காதல் திரைப்படத்தை கொஞ்சம் பூச்சு வேலை செய்து மீண்டும் மதுரையின் கவுரவம் என வெளியிட்டுள்ளனர். இன்னும் மதுரையை எத்தனை காலம் இப்படி சிதைக்கப்போகிறார்கள்.மதுரையை இவர்கள் எப்படி பிரதிபலித்துள்ளனர் என்பதற்கு ஒரு சில படங்களை வரிசைபடுத்துகிறேன் பாருங்கள். மதுரை சம்பவம், காதல், தேவராட்டம், கோரிப்பாளையம் இந்த வரிசையில் சில வெளியில் தெரியாத படங்களும் உண்டு. இதற்கு நடுவே தேனியையும் மதுரையுடன் சேர்ந்து திரைப்படங்கள் வெளிவந்தன.
மதுரையில் ரவுடிசம், சாதி, கவுரவக்கொலை இதைத் தவிர வேறு எதுவும் இல்லையா?. அடுத்த தலைமுறைக்கு எதை கடத்த வேண்டுமோ அதை கடத்தாமல் வெறும் வறட்டு கவுரம் என்ற பெயரில் இப்படி ரவுடிசத்தையும், கொலை செய்வதையும் கொண்டு சேர்ப்பதை தான் இந்த சினிமா ஊக்குவிக்கிறதா?. மதுரைக்கு இது மட்டும் தான் பெருமையா வேறு எந்த பெருமையும் கிடையாதா ? மதுரை பேசாதா அரசியலா , மதுரை மண் பார்க்காத சினிமாவா , மதுரைக்கு இல்லாத வரலாறா இப்படி விஷயங்கள் கொட்டிக்கிடப்பது திரைக்கதையாசிரியர்களுக்கு தெரியாதா. மதுரை தென்தமிழ்நாட்டில் நுழைவு வாயில்.
எம்.ஜி.ஆரை திரைப்பிரபலம் என்ற உச்சத்துக்கு கொண்டு சென்ற மதுரைக்கு உண்டு.மதுரைக்கும் எம்.ஜி.ஆருக்கும் மதுரைக்குமான தொடர்பு அத்தகையது. அதே போல காந்திக்கு அவரது வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தியது மதுரை தான். இப்படி பல தகவல்கள் மதுரை என்று கூகுளில் தட்டினால் கிடைக்கும்.
சரி அப்படியும் இல்லையா ஒரு இரண்டு சம்பவங்களை மேற்கோள் காட்டுகிறேன். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் இந்த கிராமத்தில் பஞ்சாயத்து தேர்தல் நடந்தது கிடையாது. காரணம் இவை மூன்றும் தலித் பஞ்சாயத்துகள். ஒவ்வொரு முறையும் யாராவது வேட்புமனு தாக்கல் செய்தால் மிரட்டப்பட்டு வாபஸ் பெற வைப்பர். சிலர் தைரியமாக போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு ராஜினாமா செய்து விடுவர். இது தொடர்கதையாக நிகழ்ந்தது. இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வந்தது அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் உதயசந்திரன் தான். அந்த உதயசந்திரன் மாற்றம் செய்யப்பட்ட போது அந்த மூன்று பஞ்சாயத்து தலைவர்களும் அந்த பதவியை ராஜினாமா செய்ய முன் வந்தனர்.அந்த மூன்று கிராமமே அதிர்ச்சியில் இருந்தது. இந்த சம்பவம் நடந்தது மதுரை தான்.
மதுரைக்கு அருகே உள்ளே ஊர் பொதும்பு. சாதிய இழிவுகள், அதிகார வர்க்கம், போலீசின் அடக்குமுறைகளையும், கம்யூனிஸ்ட் உறுப்பினர்களின் உறுதியான போராட்டங்களையும் கண்ட ஊர்
அன்றைய சூழலில் தாழ்த்தப்பட்ட மாணவர்களை ஊர்ச் செல்வந்தர்களின் வீட்டு வேலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். அதாவது பணக்காரர்களின் நன்மதிப்பைப் பெறுவதற்காக ஒடுக்கப்பட்ட மாணவர்களை ஆசிரியர்களே அனுப்பி வைப்பார்களாம். அப்படி ஒருநாள் வீரணனை அவ்வூரின் பெரும் பணக்காரரான நாகு சேர்வைக்குச் சொந்தமான கோயிலின் கட்டிட வேலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
எப்போதெல்லாம் கூப்பிடுகிறார்களோ, அப்போதெல்லாம் பள்ளியைவிட்டு சித்தாள் வேலைக்குச் செல்ல வேண்டும். கோயிலைக் கட்டி முடித்த பிறகு, கும்பாபிசேகம் அன்று வாழை இலை சோறுபோட்டு அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தனது வயதான தாயை அழைத்துக் கொண்டு எல்லோரையும்போல வீரணனும் இலையைப் பெற்றுக் கொண்டு சாப்பிடச் சென்றிருக்கிறார். இதைப் பார்த்த நாகு சேர்வை, கொதித்தெழுந்து, “ஏண்டா உனக்கெல்லாம் இலைசோறு கேட்குதா, சட்டிமுட்டி கெடக்கலையா?” என்று சாதிவெறியைக் கக்குகிறார். பிறகு, வேறுவழிதெறியாமல் அவரது தாய் தனது முந்தானையில் சாப்பாட்டை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து சாப்பிட்டிருக்கிறார்கள்.
அந்த நபர் தான் தோழர் பொதும்பு வீரணன். பின்னாளில் அவருடைய நாள்குறிப்புகள் எல்லாம் தொகுத்து ஒரு கம்யூனிஸ்ட் கிராமத்தின் கதை என்ற பெயரில் புத்தகம் ஒன்று வெளிவந்தது. இப்படிபட்ட போராட்டங்களையும் மதுரை சந்தித்துள்ளது. இவை எல்லாம் திரைக்கதையாசிரியர்களுக்கு தெரியாதா ??
மதுரையை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வந்த போது , பெருமைக்கு பெயர் வேண்டாம். இங்கு தொழிற்சாலைகள் , வேண்டும் ஐடி நிறுவனங்கள் வேண்டும் என முன்னேற்றத்திற்கு என்ன தேவையோ அதனை இளைஞர்களும், மக்களும் கேட்க துவங்கிவிட்டனர்.
இப்படி மதுரை முன்னோக்கி சென்று கொண்டிருக்கும் போது ரவுடிசம் செய்வது, பைக்கில் வீலிங் செய்வது, ஜெயிலுக்கு சென்று வருவது போன்றவற்றை மாஸ் என காட்டும் போது இன்றைய தலைமுறையை திசை திருப்பும் போக்கு தான்.